2026: இயக்குனர் & எழுத்தாளர் ரவி பார்கவன் ஏன் மனிதர்களை (Horse)குதிரைகளைப் போல் ஓய்வு எடுங்கள் என்று சொல்கிறார் தெரியுமா?
அதென்ன (Horse)குதிரையைப் போல் ஓய்வு எடுப்பது..? மனிதர்கள் மனிதர்களாக ஓய்வு எடுக்கவேண்டும். ‘நாங்கள் ஏனய்யா குதிரையைப் போல் ஓய்வு எடுக்க வேண்டும்!?’
‘சரி, மனிதர்கள் எப்படி ஓய்வு எடுக்கிறார்கள்..?
Facebook
Instagram
YouTube
Twitter
மத்தியானம் ஒரு தட்டு நிறைய சோறு, கறிக் குழம்பு, அல்லது மீன் குழம்பு அது முடிந்ததும் சாம்பாரும் வேண்டும்! மீண்டும் தட்டில் சோறு, காரக்குழம்பு வேண்டும்!
அப்புறம் ரசம், அப்புறம் தயிர். மீண்டும் மீண்டும் சோறு, இடையில் பொரியல், கூட்டு, அப்பளம், ஊறுகாய்! கவளம் கவளமாக உள்ளே தள்ளுவது அதாவது தொண்டை வரை! தட்டுத் தடுமாறி எழுந்து பெட்ரூம் செல்வது.
“சிவகாமி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன், நீயும் கொஞ்சம் தலைச் சாய்ச்சு ரெஸ்ட் எடு” இருந்தால் ஏ-சி–யைப் போடுவது. இல்லையென்றால் ஃபேனைப் போட வேண்டும். இரண்டரை மணிக்கு தலையைச் சாய்த்தால் ஆறரை மணிக்கு எழுவது!
அதாவது சாலிடாக நான்கு மணிநேரம் தூங்குவது!! எழுந்ததும் லைட்டா டிஃபன் வேண்டும். நுரைதள்ள காபி வேண்டும்! பட்டப்பகலில் நான்கு மணிநேரம் தூங்கி ஓய்வு எடுப்பது.!?
உங்களுக்கு ஓய்வு என்றால் என்னவென்று தெரியுமா?
மதிய ஓய்வு என்பது கட்டாயம்! அந்த ஓய்வு உங்களை இரவு வரை உற்சாகமாக வைத்திருக்கும். அந்த ஓய்வு மட்டமல்லாக்காக படுத்து தூங்குவதில் இல்லை!
உட்கார்ந்த இடத்தில் மனதை காற்றாடி போல் வைத்துக் கொண்டு, சிந்தனையை இலகுவாக வைத்துக் கொண்டு, முந்தைய பிந்தைய நிகழ்வுகளை மறந்து, இருக்கும் இடத்தில் சற்றுச் சாய்ந்து கண்களை மூடிக் கொள்ள வேண்டும். மனதில் எதுவும் இருக்கக் கூடாது. மனதை அலைபாய விடக் கூடாது. சிறகடித்துப் பறக்கும் நிலையில் மனதைத் தயார் ஆக்கிக் கொள்ள வேண்டும்!
பின்னால் சாய்ந்தால் பின் தலையில் எதுவும் உறுத்தக் கூடாது. வலியை உணரக் கூடாது. இயன்றால் ஒரு சிறு டவலை தலைக்குப் பின்னால் வைத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடி விடுங்கள். அப்படியே தூக்கம் வந்தாலும் தூங்கி விடுங்கள்!
தூக்கம் வரவில்லை என்றாலும் கண்களை மூடியபடியே இருங்கள்.! இதற்குப் பழகினால் பத்தாவது நாளில் சாய்ந்தபடி சிறு ஓய்வு கலந்த தூக்கம் உங்களை ஆட்கொள்ளும்! இருபதாவது நாளில் மிக ஆழ்ந்த ஓய்வில் இருப்பீர்கள்!!
தூங்க வேண்டிய அவசியமில்லை! உங்களின் மூளை ஓய்வு எடுக்கும்.
நாடிநரம்புகள் ஓய்வு எடுக்கும். கழுத்துக்குக் கீழே உள்ள உட்புற உறுப்புக்கள் ஓய்வு எடுக்கும். காமம் அடங்கும்! பிறரைப் பற்றி தவறாக எண்ணத் தோன்றாது!
ஒருமாதம் கழித்து எவ்வளவு ஓய்வு தேவையோ, அந்த ஓய்வை அனுபவித்து, மறு நொடி உங்கள் மனம் உங்களை எழுப்பி விடும், உசுப்பிவிடும்!
எழுந்து, ‘சும்மாதானே படுத்து இருந்தோம், சும்மாதானே ஓய்வு எடுத்தோம்’ என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே பொய் சொல்லிக் கொள்ளாமல், வாய் கொப்பளிக்க வேண்டும். தண்ணீரை வாயில் ஊற்றி உமிழ்ந்து விட்டு முகத்தைக் கழுவி, தலைவாரிக் கொண்டு வேலைகளில் இறங்குங்கள்.
உங்கள் படைப்பில் நீங்கள் வெகுவாக சிறப்பு அடைவீர்கள்! உத்தியோகத்தில் சாதிப்பீர்கள்!
(Horse) குதிரை… அதைத்தான் செய்கிறது!
உத்தியோகத்தில் சாதிப்பது என்பது, குதிரைக்கு களைப்பே இல்லாமல் ஓடிக் கொண்டே முன்னேறிக் கொண்டே இருப்பது!
எஜமான் ‘போதும்’ என்று நிறுத்தும் வரை (Horse) குதிரைகள் தங்கள் ஓட்டத்தை நிறுத்துவது இல்லை! அவன் எங்கு நிறுத்துகிறானோ… அங்கு நின்ற மறுநொடி குதிரை கண்ணை மூடிக்கொள்ளும்!
குதிரையைப் படுத்துப் பார்த்து இருக்கிறீர்களா? பார்த்து இருக்கிறீர்கள் என்றால்… அது கழுதை. (Horse)குதிரை மாதிரி இருக்கும் கழுதை!
ஒரிஜினல் குதிரை படுத்துத் தூங்குவதில்லை! நின்றபடிதான் தூங்கும். நின்ற இடத்தில் நின்றபடி கண்களை மூடிக் கொண்டு எதைப் பற்றியும் கவலைப்படாமல் கண்களை மூடிக் கொள்ளும். மீண்டும் எப்போது எஜமானர் அழைக்கிறானோ அடுத்த நொடி தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும்…
முன்னேறுவதற்கு!
நல்ல எஜமானனாக இருந்தால் (Horse)குதிரையைக் கிளப்பும் முன் தண்ணீர் வைப்பான். வாய் நிறைய தண்ணீரை அடக்கி உள்ளுக்கு உள்ளயே கொப்பளித்து விழுங்குவதை நீங்கள் பார்க்கலாம்.
ஆக, அளவாக ஓய்வு எடுப்பதை… அந்த அளவு ஆழ்ந்தும் இருப்பதை நாம் குதிரைகளிடம் இருந்து கற்க வேண்டும்!
குதிரைகளைப் போல் ஓய்வு எடுங்கள். தங்கு தடையின்றி முன்னேறிக் கொண்டே இருக்கலாம்.!
