Sorgavasal | பெருமாள் கோயில்களில் மட்டும் சொர்க்கவாசல் திறப்பது ஏன்? பின்னணியில் உள்ள ஆன்மீக காரணம்.!
பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விரதம், பக்தியிலும் புண்ணியத்திலும் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. “மார்கழி மாத ஏகாதசி விரதம் இருந்து என்னை வழிபடும் அனைவருக்கும் வைகுண்ட பதவி அளிப்பேன்” என்று பகவான் மஹாவிஷ்ணு அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவத் கீதையிலும், “மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன்” என்று கிருஷ்ணபரமாத்மா கூறியிருப்பதால், மார்கழி மாத ஏகாதசிக்கு தனி சிறப்பு உண்டு.
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி நாளில், பெருமாள் கோயில்களில் மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்படும் வழக்கம் உள்ளது. ஏகாதசி என்ற சொல்லுக்கு பதினொன்றாம் நாள் என்பது பொருள். ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள் மற்றும் மனம் ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஒன்றிணைத்து தியானம் செய்வதே ஏகாதசி விரதத்தின் தத்துவமாகும். இந்த விரதத்தின் மூலம், இறைவனின் அருள் இருந்தால் சொர்க்கம் அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சொர்க்கவாசல் திறப்பு – புராணப் பின்னணி:
புராணங்களின்படி, திருமாலின் நாபிக்கமலத்தில் இருந்து தோன்றியவர் பிரம்மா. அவருக்குப் படைக்கும் தொழில் வழங்கப்பட்டது. ஒருமுறை, தன்னுடைய படைப்புப் பணியைப் பற்றி பெருமை பேசிய பிரம்மாவுக்கு அகந்தை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை உணர்ந்த திருமால், மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்களை உருவாக்கி, பிரம்மனைத் தொந்தரவு செய்ய அனுப்பினார்.
அந்த அரக்கர்கள் வேதங்களை பறித்து, படைப்புப் பணியை முடக்கினர். துன்பம் தாங்க முடியாமல் திருமாலிடம் சரணடைந்த பிரம்மாவுக்கு, அகந்தை வேண்டாம் என்றும், கடமையை மனமார செய்தால் அது எளிதாகும் என்றும் திருமால் அறிவுரை வழங்கினார். பின்னர், மது–கைடபர்களின் அகந்தைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
வைகுண்டத்தின் கிழக்குவாசல் வழியாக புண்ணியவான்கள் மட்டுமே நுழைய முடியும். பாவச் செயல்களில் ஈடுபட்ட மது, கைடபர்களை அந்த வழியாக அழைத்துச் செல்ல இயலாததால், திருமால் வைகுண்டத்தின் வடக்கு திசையில் ஒரு தனி வாசலை உருவாக்கினார். அந்த வாசலே “சொர்க்கவாசல்” என அழைக்கப்படுகிறது. இதன் நினைவாகவே, வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் திறந்து பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.
மது, கைடபரை தம்முடன் இழுத்துச் சென்றது போல, நம்மையும் இறைவன் தன் கருணையால் வைகுண்டத்துக்குள் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற பிரார்த்தனையுடனே, பக்தர்கள் சொர்க்கவாசல் தரிசனம் செய்கின்றனர்.
வைகுண்ட ஏகாதசி விரதம் – கடைப்பிடிக்கும் முறை:
ஏகாதசி நாளன்று அதிகாலையில் குளித்து, பூஜை செய்து, பகவான் மஹாவிஷ்ணுவின் நாமங்களை ஜபித்து விரதம் இருக்க வேண்டும். பகல் நேரத்தில் தூங்காமல் விழித்திருப்பது அவசியம். முழுமையாக விரதமிருக்க இயல்பவர்கள், நீர் மட்டும் அருந்தலாம். பசி அதிகமானால் துளசி இலையும் துளசி தீர்த்தமும் ஏழு முறை எடுத்துக் கொள்ளலாம்.
முழு விரதம் இயலாதவர்கள், பழங்கள், காய்கறிகள், பால், தயிர், நெய் போன்றவற்றை முதலில் பெருமாளுக்கு நைவேத்யம் செய்து பின்னர் உணவாக எடுத்துக் கொள்ளலாம். ஏகாதசி விரதத்தை துவாதசி நாளில் முறையாக முடித்து, அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டக்காய் போன்றவற்றை உண்டு பெருமாளை தரிசனம் செய்தால், விரதத்தின் முழுப் பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
