விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த சில நிமிடங்களில் விபத்தில் சிக்கிய விஜய் கார் – நடந்தது என்ன?

மலேசியாவில் நடைபெற்ற ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை முடித்துக்கொண்டு நடிகர் விஜய் நேற்று இரவு சென்னைக்கு திரும்பினார். மலேசியாவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த அவரை வரவேற்க ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

விமான நிலையத்தில் இருந்து வெளியேறி தனது காரை நோக்கி செல்லும் போது, கூட்ட நெரிசலால் விஜய் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தூக்கி காருக்குள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த சில நிமிடங்களிலேயே விஜய் பயணித்த கார் ஒரு சிறிய விபத்தில் சிக்கியது. காரில் விஜயுடன் அவரது பாதுகாவலர்கள் மற்றும் ஓட்டுநர் இருந்தனர். விமான நிலைய வளாகத்தை கடந்து வெளியே வந்தபோது, ரிவர்ஸில் வந்து கொண்டிருந்த மற்றொரு கார், விஜய் வந்த காரின் மீது லேசாக உரசியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில், விஜய் காரின் இண்டிகேட்டர் பகுதி சேதமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, இது சிறிய வகை விபத்து என்பதால் நடிகர் விஜய், அவரது பாதுகாவலர்கள் மற்றும் ஓட்டுநருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் சிறிது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, விமான நிலையத்தில் விஜய் கீழே விழுந்த சம்பவம் தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. சிலர் கூட்ட நெரிசலே காரணம் என கூற, மற்றவர்கள் அவர் தள்ளி விடப்பட்டாரா என்ற சந்தேகத்தையும் எழுப்பி வருகின்றனர்.

விஜய் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.