விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்: உதய்பூர் கோட்டையில் நடக்கும் இரகசிய விழா மற்றும் ஹைதராபாத்தில் வரவேற்பு.!

தெலுங்கு சினிமாவின் பிரபல நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா பற்றிய காதல் மற்றும் திருமணம் செய்திகள் மீண்டும் கவனம் ஈர்க்கின்றன. ‘கீத கோவிந்தம்’ படத்தில் இணைந்து நடித்ததிலிருந்து இருவரும் ரகசியமாக காதல் செய்து வருவதாக பரவும் செய்திகள், சமீபத்தில் புதிய தகவல்களால் தீப்பற்றுகின்றன. கடந்த அக்டோபர் மாதம், குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் இருவரும் நிச்சயம் செய்துக்கொண்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தை மாதம் அல்லது பிப்ரவரி இறுதியில் திருமணம் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி, ரசிகர்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா, கன்னட திரையுலகில் ‘கிரிக் பார்ட்டி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அப்போது சில காதல் உறவுகள் ஏற்பட்டாலும், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக திருமணம் முடியாமல் முடிந்தது. அதன் பின்னர், அவர் முழுமையாக தனது நடிப்பு வாழ்க்கையில் கவனம் செலுத்தி, தெலுங்கு திரையுலகில் வெற்றிப் படங்களில் நடித்து வந்தார். பின்னர் தமிழ் மற்றும் இந்தி படங்களில் வாய்ப்புகளைப் பெற்று, பான் இந்தியா நடிகையாக உயர்ந்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவுடன் ‘கீத கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ போன்ற படங்களில் இணைந்து நடித்த ராஷ்மிகா, இந்த படங்களின் வெற்றியால் ரசிகர்களிடையே பிரபல ஜோடியாக பேசப்பட்டார். இருவருக்கும் இடையேயான நட்பு படப்பிடிப்புக்கு அப்பாற்பட்ட நேரங்களிலும் தொடர்ந்தது. வெளிநாட்டு பயணங்கள், குடும்ப விழாக்களில் கலந்து கொண்டது போன்ற தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி, உறவு குறித்த கிசுகிசுக்கள் வலுப்பெற்றன.

தொழில்முறையிலான வெற்றி மற்றும் தோல்வியையும் சமீப காலங்களில் ராஷ்மிகா சந்தித்து வந்தார். ‘சாவ்வா’ திரைப்படம் உலகம் முழுவதும் 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதே நேரத்தில் ‘தம்மா’ எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை. தெலுங்கு திரைப்படமான ‘தி கேர்ள் ஃபிரெண்ட்’ விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது. மறுபுறம், விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘கிங்டம்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

திருமணம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின் படி, இருவரும் அக்டோபர் மாதம் நிச்சயம் செய்துக் கொண்டதாகவும், வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி, ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள பழமையான பிரம்மாண்ட கோட்டையில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் சினிமா பிரபலங்களுக்காக தனியாக ஒரு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திருமணத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா விரைவில் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். பல ஆண்டுகளாக தொடர்ந்த கிசுகிசுக்களுக்கு இவ்வாறு முடிவு வருவதாக எதிர்பார்ப்பும், திரையுலகிலும் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.