இறப்புக்கு முன் முரளி பேசிய வார்த்தைகள் இன்னும் காதில் ஒலிக்குது” – மனம் திறந்த நடிகை நளினி.!

1980-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை நளினி, மறைந்த நடிகர் முரளி குறித்து பகிர்ந்துள்ள உருக்கமான நினைவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1983ஆம் ஆண்டு டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நளினி, தனது அகலமான கண்கள், சுருண்ட முடி மற்றும் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அந்த படம் 100 நாட்களுக்கும் மேலாக ஓடி, நளினியின் மார்க்கெட்டை வேகமாக உயர்த்தியது.

அதனைத் தொடர்ந்து ‘நூறாவது நாள்’, ‘வீட்டுக்கு ஒரு கண்ணகி’, ‘24 மணி நேரம்’, ‘பிள்ளை நிலா’, ‘பாலைவன ரோஜாக்கள்’, ‘யார்’ போன்ற படங்களில் நடித்த நளினி, அமைதி, அச்சம், காதல், கோபம், வலி என அனைத்து உணர்ச்சிகளையும் திரையில் இயல்பாக வெளிப்படுத்தி தனக்கென தனி இடத்தை உருவாக்கினார்.

1987ஆம் ஆண்டு நடிகர் ராமராஜனை காதலித்து, எம்.ஜி.ஆர். முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட நளினிக்கு, அருணா மற்றும் அருண் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக 2000ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

திரைப்படங்களில் மட்டுமின்றி, ‘கிருஷ்ணதாசி’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’, ‘கோலங்கள்’, ‘கல்யாண பரிசு’, ‘மோதலும் காதலும்’ போன்ற சின்னத்திரை தொடர்களிலும் நடித்த நளினி, தமிழ் இல்லங்களின் மனங்களில் உறுதியான இடம் பெற்றார்.

முரளி குறித்து உருக்கமான நினைவு
சமீபத்தில் வெளியான ஒரு பழைய பேட்டியில், நடிகை நளினி, மறைந்த நடிகர் முரளி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது,

“முரளி எப்போதும் ‘நமக்கு அக்கா – தம்பி கதாபாத்திரம்தான் சரியாக இருக்கும், ஆனால் நம்மை ஜோடியாக போட்டிருக்காங்க’ என்று சிரிப்பார். காதல் காட்சிகள் பண்ணும் போதே இரண்டு பேருக்கும் சிரிப்பு வந்துவிடும்.”மேலும் அவர் கூறும்போது,

“முரளி இறப்பதற்கு முன்பு நடிகர் சங்க கூட்டத்திற்கு வந்தார். அப்போது நானும் அவரும் வாழ்க்கை பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அந்தப் பேச்சு முடிந்த இரண்டாவது நாளே முரளி இறந்துவிட்டார். அது எனக்கு தாங்க முடியாத ஒரு பெரிய இழப்பு” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நளினியின் இந்த பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே சோகத்தையும் நினைவுகளையும் கிளப்பி வருகிறது.