இறைவனுக்குரிய மார்கழி மாதம்: சுபகாரியங்கள் ஏன் ஒத்திவைக்கப்படுகின்றன?
மார்கழி மாதம் தமிழ் மாதங்களில் மிகவும் மங்களகரமான மற்றும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்த மாதத்தில் பெரும்பாலான வீடுகளில் திருமணம் போன்ற ஆடம்பர சுபநிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன என்பதை பலரும் அறிய விரும்புகின்றனர்.
மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் போன்ற முக்கியமான ஆன்மிக தினங்கள் தொடர்ந்து வருவதால், இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கே உரிய காலமாகக் கருதப்படுகிறது. ஆடி மாதம் அம்பிகைக்கு உரியது என்று சொல்லப்படுவது போல, மார்கழி மாதம் முழுவதும் இறைவனுக்கே அர்ப்பணிக்கப்பட்ட மாதம் என ஆன்மிக மரபுகள் கூறுகின்றன.
இந்த மாதத்தில் இறை சிந்தனையைத் தவிர வேறு எந்த உலகியல் ஆசைகளும் இருக்கக் கூடாது என்பதே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதனால் தான் திருமணம் போன்ற குடும்ப விழாக்கள் தவிர்க்கப்படுவதாக நம்பப்படுகிறது.
ஆன்மிக ரீதியாக, மார்கழி மாதம் என்பது தேவர்களின் அதிகாலைப் பொழுதாக கருதப்படுகிறது. இதனை பிரம்ம முகூர்த்த காலம் என்றும் அழைக்கின்றனர். இந்த காலகட்டத்தில் அதிகாலையில் எழுந்து இறைவனை வழிபடுதல், கோவிலுக்கு செல்வது, பஜனை செய்வது, விஷ்ணு–சிவ நாமங்களை உச்சரிப்பது போன்ற ஆன்மிக செயல்களில் ஈடுபட வேண்டும் என கூறப்படுகிறது. இதனால், உலகியல் நிகழ்வுகளைத் தற்காலிகமாக ஒத்திவைப்பது சிறந்தது என்ற கருத்து நிலவி வருகிறது.
மார்கழி மாதத்தில் திருமணம் மட்டுமல்லாமல், திருமணத்துடன் தொடர்புடைய பல சுபகாரியங்களும் தவிர்க்கப்படுகின்றன. அதில் திருமண பத்திரிகைகள் வாங்குதல், அச்சடிக்க கொடுப்பது, திருமண பேச்சுவார்த்தைகள் நடத்துவது போன்றவையும் அடங்கும்.
மேலும், சிலர் இந்த மாதத்தில் காது குத்துதல், மொட்டை அடித்தல் போன்ற சடங்குகளையும் தவிர்க்கின்றனர். கோவில்களைப் பொருத்தவரை, சிலை பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் போன்ற முக்கிய நிகழ்வுகளும் மார்கழி மாதத்தில் பொதுவாக நடத்தப்படுவதில்லை.
அதேபோல், சில குடும்பங்களில் புது வீட்டிற்கு குடியேறுதல் (கிரகப்பிரவேசம்), வாடகை வீட்டிலிருந்து இடமாற்றம், அலுவலக மாற்றம் போன்ற விஷயங்களையும் தவிர்ப்பது வழக்கம். புது தொழில் தொடங்குதல், தொழில் விரிவாக்கம், பெரிய முதலீடுகள் செய்வது போன்றவற்றையும் சிலர் ஒத்திவைக்கின்றனர்.
நிலம் அல்லது வீடு வாங்கும் விஷயத்தில் கூட, மார்கழி மாதத்தில் வாங்கினாலும், பதிவேடு (ரஜிஸ்ட்ரேஷன்) மார்கழி முடிந்த பின் செய்வது வழக்கமாக உள்ளது.
இவ்வாறு மார்கழி மாதத்தில் சில விஷயங்களை செய்யாமல் இருப்பது அவசியம் என ஒரு தரப்பினர் கூறினாலும், இன்னொரு தரப்பினர் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் தவறு இல்லை எனக் கூறுகின்றனர். இதனால், மார்கழி மாதத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன தவிர்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் மரபு மற்றும் நம்பிக்கையைப் பொறுத்து மாறுபடும்.
எனவே, குடும்ப வழக்கங்களை கருத்தில் கொண்டு செயல்படுவதே அனைவருக்கும் நல்லது என்று ஆன்மிக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
