‘ரிலீஸ் ஆனபோது யாரும் பார்க்கவில்லை, இப்போது கிளாசிக் என புகழ்கிறார்கள்’ – கமல் படம் குறித்து ஆதங்கப்பட்ட ஸ்ருதிஹாசன்.!
நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த பேட்டியில், தன்னுடைய தந்தை கமல்ஹாசன் இயக்கிய புகழ்பெற்ற படம் குறித்து அவர் வெளிப்படுத்திய கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
கமல்ஹாசன் திரைக்கதை எழுதி இயக்கிய படம் ‘ஹே ராம்’. 2000-ம் ஆண்டு வெளியான இப்படம், இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான கிளாசிக் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் படம் வெளியான சமயத்தில் அதற்கு கிடைத்த வரவேற்பு குறைவாக இருந்தது என்பதைக் குறித்து ஸ்ருதிஹாசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் ஸ்ருதிஹாசன் கூறியதாவது:
“அப்பா இயக்கிய ஹே ராம் படத்தை சமீபத்தில் தியேட்டரில் பார்த்தேன். ஒவ்வொரு பிரேமையும் அவர் அமைத்த விதம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. சமீபத்தில் இந்தப் படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. க்யூப்ஸ் தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அந்த அளவுக்கு எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இப்போது பலரும் அந்தப் படத்தை வானளாவப் புகழ்கிறார்கள். ‘கமல் சார் எப்படி இவ்வளவு பிரமாதமாக இந்தப் படத்தை எடுத்தார்?’ என்று கேட்கிறார்கள். ஆனால், படம் ரிலீஸான நேரத்தில் அதைப் பார்க்க யாரும் வரவில்லை. அப்போது இந்த அளவுக்கு பாராட்டப்படவில்லை என்பதே என் மனதில் இருந்த வலி,” என்று ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
ஸ்ருதிஹாசனின் இந்த கருத்துகள், காலத்தை கடந்த படைப்புகளுக்கு கிடைக்கும் தாமதமான அங்கீகாரம் குறித்து மீண்டும் ஒரு விவாதத்தை எழுப்பியுள்ளது. ஹே ராம் படம் அரசியல், மதம், வன்முறை போன்ற நுணுக்கமான விஷயங்களை ஆழமாக பேசும் படமாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கமல்ஹாசன் தற்போது தனது புதிய படத்தில் பிஸியாக உள்ளார். தென்னிந்திய சினிமாவின் பிரபல ஸ்டண்ட் இயக்குநர்களான அன்பறிவு மாஸ்டர்ஸ் இயக்கும் இப்படத்திற்கு, மலையாள எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன் திரைக்கதை எழுதுகிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு படம் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு பக்கம், ஸ்ருதிஹாசனும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக அவர் நடித்த கூலி படம் இந்த ஆண்டு வெளியானது. இதில் ரஜினிகாந்தின் மகளாக அவர் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் டிரெய்ன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதுதவிர ஜனநாயகன் படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
