பருவ வயதில் பேருந்தில் நடந்த பாலியல் சீண்டல்: நள்ளிரவு பயணத்தில் சந்தித்த கொடூரத்தை பகிர்ந்த நடிகை ஆஷிகா அசோகன்.!
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் வயது, இடம், நேரம் என எந்த எல்லையும் இல்லாமல் தொடர்ந்து நிகழ்ந்து வருவது சமூகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்களில் ஒன்றாக உள்ளது. பல சம்பவங்கள் வெளியில் வராமலேயே மறைந்து போகும் நிலையில், சிலர் தங்களின் கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து, சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், இளம் நடிகை ஆஷிகா அசோகன், தன் பருவ வயதில் பேருந்தில் நடந்த ஒரு கொடூரமான பாலியல் சீண்டல் சம்பவத்தை வேதனையுடன் பகிர்ந்துள்ளது ரசிகர்களையும் சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ஆஷிகா அசோகன், இந்தப் படம் தொடர்பாக ஏபிபி நாடு சேனலுக்கு அளித்த நேர்காணலில், பெண்கள் எதிர்கொள்ளும் அன்றாட அச்சுறுத்தல்கள் குறித்து மனம் திறந்து பேசினார். அந்த நேர்காணலின் போது, “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலர் அதை வெளியில் சொல்ல துணிவதில்லை. உங்கள் வாழ்க்கையில் இப்படியான ஏதாவது சம்பவம் நடந்துள்ளதா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆஷிகா பகிர்ந்த அனுபவம், கேட்பவர்களின் மனதை உலுக்கியது.
அவர் கூறியதாவது: “நான் 12ம் வகுப்பு முடித்த பிறகு, எனது பட்டப்படிப்பிற்காக பெங்களூருவில் உள்ள கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருந்தேன். அதே சமயம் கோயம்புத்தூரில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்திலும் அப்ளை செய்திருந்தேன். ஒரு நாள் கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து திடீரென அழைப்பு வந்தது. ‘நாளைக்கு நீங்கள் நேரில் வர வேண்டும்’ என்று சொன்னார்கள். உடனடியாக அழைத்ததால் வேறு போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்ய முடியவில்லை.”
“நான், அம்மா, அப்பா, தம்பி நால்வரும் கர்நாடக அரசு பேருந்தில் பெங்களூருவில் இருந்து கோயம்புத்தூருக்கு திரும்பி வந்தோம். அந்தப் பயணம் இரவு நேரத்தில் நடைபெற்றது. வழியில் காட்டு பகுதி போன்ற பாதைகளைக் கடந்து தான் வர வேண்டியிருந்தது. அதிகாலை தான் கோயம்புத்தூரை அடையும் நிலை.”
அந்த நேரத்தில் தன் வயது குறித்து பேசும் போது, “அப்போது எனக்கு 16 அல்லது 17 வயது தான் இருக்கும். நான் ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்தேன். என் தம்பி அம்மாவின் மடியில் தலை வைத்து தூங்கிக் கொண்டிருந்தான். அதன் பின்பு அப்பா அமர்ந்திருந்தார். இரவு பயணம் என்பதால் பேருந்தின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தோம்” என தெரிவித்தார்.
அந்தப் பயணத்தின் போது நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த ஆஷிகா, “ஒரு கட்டத்தில் என் மீது ஏதோ ஒன்று பட்டது போல உணர்ந்தேன். முதலில் அது இலை அல்லது ஏதோ பொருள் என நினைத்து தட்டிவிட்டு மீண்டும் தூங்க முயற்சி செய்தேன். ஆனால் மீண்டும் மீண்டும் ஏதோ கை என் மீது படுவதை உணர்ந்தபோது, அது பின்னால் அமர்ந்திருந்த நபரின் கை என்று புரிந்தது. அந்த அதிர்ச்சியும் பயமும் என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை” என்று கூறினார்.
“இரண்டு முறை நான் எதுவும் சொல்லாமல் இருந்தேன். மூன்றாவது முறை அந்த நபரின் கை மீண்டும் பட்டதும், பயத்துடன் அம்மாவிடம் சொல்லிவிட்டேன். அம்மா உடனடியாக அப்பாவிடம் சொன்னார். என் அப்பா எழுந்து அந்த நபரை நேரடியாக தாக்கினார். அவனை தூக்கி வெளியே இழுத்துப் போட்டார். ஆனால் அந்த பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் யாரும் இதற்கு எதிராக எதுவும் செய்யவில்லை. அந்த நபரின் முகத்தைக் கூட நான் தெளிவாக பார்க்கவில்லை” என அவர் வேதனையுடன் பகிர்ந்தார்.
இந்த சம்பவம் சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. குறிப்பாக, பொது போக்குவரத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சிக்கல்கள் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். “ஒரு குழந்தை வயதில் இப்படியான அனுபவம் எவ்வளவு பெரிய மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்” என ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
“ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” திரைப்படம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் நீதிக்கான போராட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் ரயான் இயக்கத்தில், சாண்ட்ரா அனில், ஆஷிகா அசோகன், ஐஸ்வர்யா, ரேகா, ஹரீஷ் பேரடி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதால், இப்படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தன் சொந்த வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ள ஆஷிகா அசோகன், “இது என் கதை மட்டுமல்ல; பல பெண்களின் கதை” என்பதையே மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். அவரது இந்த நேர்மை, பல பெண்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை மௌனமாக மறைப்பதைவிட, வெளியில் சொல்லி எதிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை இந்த சம்பவம் மீண்டும் வலியுறுத்துகிறது.
