போதையில் கார் ஓட்டி சென்ற சீரியல் நடிகரின் கார் விபத்து..சம்பவ இடத்தில் நடந்த சோகம்..
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மலையாள சீரியல் நடிகர் சித்தார்த் பிரபு, குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதுடன், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரை தாக்கிய சம்பவம் கோட்டயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகைச்சுவை மற்றும் குடும்பக் கதையம்சம் கொண்ட மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்துப் பிரபலமானவர் சித்தார்த் பிரபு. நடிப்புத் துறையைத் தவிர, தனியார் பாதுகாப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு அவர் தனது காரில் கோட்டயத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற லாட்டரி விற்பனையாளர் ஒருவரின் மீது மோதியது. இந்த விபத்தில் அந்த நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
விபத்து நடந்ததும், அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்த லாட்டரி வியாபாரியை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, விபத்து குறித்து நடிகர் சித்தார்த் பிரபுவிடம் பொதுமக்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அப்போது நடிகர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தட்டிக் கேட்ட பொதுமக்களைத் திட்டியும் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த போலீசார் அவரை தடுக்க முயன்றபோதும், நடிகர் அவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, நடிகரை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காகவும், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரை தாக்கியதற்காகவும், நடிகர் சித்தார்த் பிரபுவை சிங்கவனம் போலீசார் கைது செய்தனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதோடு, நடுரோட்டில் அட்டகாசம் செய்த இந்த சம்பவம் கோட்டயம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
