MGR யை பார்த்து“அப்பா மாதிரி இருக்க நீங்களா எனக்கு ஹீரோ?” – என கேட்ட தாய்லாந்து நடிகை.!
காலத்தால் அழியாத புகழுக்கு சொந்தக்காரர்தான் புரட்சிதலைவர் MGR.. “இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்… இவர் போல யார்?” என்ற பாடல் வரிகளுக்கேற்ப வாழ்ந்து மறைந்தவர் முன்னாள் முதல்வரும், தமிழ் திரையுலகின் மாபெரும் நட்சத்திரமுமான எம்.ஜி.ஆர் (எம்.ஜி. ராமச்சந்திரன்). அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்தாலும், இன்றும் அவரது பெயர் உச்சரிக்காத தமிழன் இல்லை என்றே சொல்லலாம்.
1960, 70-களில் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம் வந்த எம்.ஜி.ஆர், தோல்வியே அறியாத நாயகன் எனப் போற்றப்பட்டார். தோல்வி படங்கள்கூட நல்ல வசூலை ஈட்டும் என்ற நம்பிக்கை அந்த காலத்தில் நிலவியது. சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் வெற்றிக் கொடிநாட்டி, மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர்.
அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக கருதப்படுவது “உலகம் சுற்றும் வாலிபன்”. அந்த காலத்திலேயே உலகின் பல முக்கிய நாடுகளுக்கு சென்று பிரம்மாண்டமாக படமாக்கப்பட்ட இந்த படம், இன்றும் ரீ-ரிலீஸ் செய்யப்படும் போதெல்லாம் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் இயக்குநர் பாரதி மோகன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “உலகம் சுற்றும் வாலிபன்” படப்பிடிப்பு காலத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, அந்த படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து நடிகை ஒருவரை தேர்வு செய்யும் முயற்சியில், அப்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த மீட்டா ரூங்ரட் தேர்வானாராம். அவரை சந்திக்க எம்.ஜி.ஆர் மிகவும் எளிமையாக, எந்த விதமான அலங்காரமுமின்றி சென்றாராம்.
அப்போது அந்த நடிகை,
“இந்த படத்தின் ஹீரோ யார்?” என்று கேட்டதற்கு,“நான்தான் ஹீரோ” என்று எம்.ஜி.ஆர் பதிலளித்தாராம். அதைக் கேட்ட நடிகை,
“என்ன சொல்றீங்க? நீங்க அப்பா மாதிரி இருக்கீங்களே… நீங்க ஹீரோவா?”என்று சற்றே ஆச்சரியத்துடன் கூறினாராம்.
இந்த சம்பவத்தை எம்.ஜி.ஆர் பின்னர் படத்தின் ஒளிப்பதிவாளரிடம் சிரித்தபடியே கூறியதாகவும்,
“நீங்கள் இப்படி சாதாரணமாக போகாமல், சரியாக தயாராகச் சென்று இருக்க வேண்டும்”
என்று அவர்கள் தெரிவித்ததாகவும் பாரதி மோகன் குறிப்பிட்டார்.
பின்னர் படப்பிடிப்பு நாளில், பேண்ட், சர்ட், கோட் அணிந்து, கண்ணாடி போட்டபடி ஸ்டைலிஷாக எம்.ஜி.ஆர் செட்டில் நின்றிருந்தாராம். அவரை பார்த்த அந்த தாய்லாந்து நடிகை ஆச்சரியத்தில்,“வாவ்… சூப்பரா இருக்கீங்க! இப்போ உங்க வயசே தெரியலையே!”என்று பாராட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பிற்குப் பிறகு, எம்.ஜி.ஆர் – மீட்டா ரூங்ரட் இணைந்து நடித்த புகழ்பெற்ற பாடல்தான்,
“பச்சைக்கிளி முத்துசரம், முல்லைக்கொடி யாரோ…”
என்ற காலத்தால் அழியாத பாடல்.
எம்.ஜி.ஆரின் ஸ்டைல், நடிப்பு, ஆளுமை மட்டுமல்ல; அவரது பணிவு மற்றும் மனிதநேயமும் அவரை உலக அளவில் தனித்துவமாக்கியதாக இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
