பொங்கல் ரிலீஸ் மோதல்: விஜய்-சிவா படங்களுக்கு எத்தனை திரையரங்குகள்?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய படங்கள் அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளன. தவேக தலைவர் விஜய் நடிப்பில் உருவான கடைசி படம் என கூறப்படும் ‘ஜனநாயகன்’ ஜனவரி 9ம் தேதி ரிலீஸாகிறது. அதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான ‘பராசக்தி’ ஜனவரி 10ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
முதலில் ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென தயாரிப்பு நிறுவனம் திட்டத்தை மாற்றி, ‘ஜனநாயகன்’ வெளியான மறுநாளே ரிலீஸ் செய்ய முடிவு செய்தது. இந்த மாற்றத்திற்கு பின்னால் பல்வேறு வணிக காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஜனவரி 9ம் தேதி ‘ஜனநாயகன்’ வெளியாவதால், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுடன் குறைந்தது இரண்டு வார காலத்திற்கு ஒப்பந்தங்கள் செய்யப்படும் என கூறப்படுகிறது. இப்படியான சூழலில், ‘ஜனநாயகன்’ 800 திரையரங்குகளில் வெளியாகும் பட்சத்தில், ‘பராசக்தி’க்கு 250 திரையரங்குகள் கூட கிடைப்பது சிரமமாகும் என்ற நிலை உருவாகலாம். இந்த சிக்கலைத் தவிர்க்கவே, ‘பராசக்தி’ படக்குழு ஜனவரி 10ம் தேதியை தேர்வு செய்துள்ளது என திரைத்துறையில் பேசப்படுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது சுமார் 1,164 திரையரங்குகள் உள்ளன. இதன் அடிப்படையில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு 550 திரையரங்குகள், ‘பராசக்தி’ படத்திற்கு 500 திரையரங்குகள் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ‘ஜனநாயகன்’ முதல் நாளில் சுமார் 700 திரையரங்குகளில் வெளியாகும் என்றும், இரண்டாம் நாளிலிருந்து 550 ஆக குறைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பக்கம் விஜய், மற்றொரு பக்கம் சிவகார்த்திகேயன் என பெரும் மார்க்கெட் கொண்ட நட்சத்திரங்களின் படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாவதால், வசூலில் தாக்கம் ஏற்படலாம் என திரையரங்கு உரிமையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக, 2023ம் ஆண்டு வெளியான ‘துணிவு’ – ‘வாரிசு’ படங்கள் ஒரே நேரத்தில் வெளியானதை அவர்கள் நினைவூட்டுகின்றனர். அந்த படங்கள் தனித்தனியாக வெளியானிருந்தால், இரண்டும் சேர்த்து 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருக்கும் என அவர்களின் மதிப்பீடு.
இரு படங்களுக்கும் திரையரங்குகளுக்கான ஒப்பந்தங்கள் நடைபெற்று வந்தாலும், இன்னும் தணிக்கை சான்றிதழ்கள் வெளியாகவில்லை. ‘ஜனநாயகன்’ படத்திற்கு U/A சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மொழி தொடர்பான அரசியல் கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் ‘பராசக்தி’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ‘பராசக்தி’ படக்குழு படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்பி, அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறது.
