ஒரே-1 ஆண்டில் தந்தை–மகன் இருவருக்கும் ஜோடி; கேப்டன் விஜயகாந்த் நாயகியின் அபூர்வ பயணம்.!
தென்னிந்திய சினிமாவின் பொன்னான காலகட்டத்தில், குறுகிய காலத்திலேயே முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தும், சில அபூர்வமான சாதனைகளை நிகழ்த்தியும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகைகளில் ஒருவர் ஸ்வப்னா. தெலுங்கு சினிமாவில் அறிமுகமானாலும், தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழித் திரைப்படங்களில் நடித்த அவர், கேப்டன் விஜயகாந்துக்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடித்த பெருமையும் பெற்றுள்ளார். அதே நேரத்தில், ஒரே ஆண்டில் தந்தை மற்றும் மகன் இருவருக்கும் கதாநாயகியாக நடித்த அபூர்வ சாதனையும் அவரது திரைப்பயணத்தில் இடம்பிடித்துள்ளது.
பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர் ஸ்வப்னா. அவரது இயற்பெயர் மஞ்சரி தோடி. சினிமா பின்னணி எதுவும் இல்லாத நிலையில், ஒரு வணிக வளாகத்தில் தற்செயலாக அவரைக் கண்ட பிரபல தெலுங்கு இயக்குநர் தாசரி நாராயண ராவ், அவரது முகபாவனையும் நடிப்பு திறனும் அவரை கவர்ந்தது. இதையடுத்து, 1981 ஆம் ஆண்டு அவர் இயக்கிய ‘ஸ்வப்னா’ என்ற திரைப்படத்தின் மூலம் மஞ்சரி தோடி திரையுலகிற்கு அறிமுகமானார். அந்தப் படத்தின் பெயரையே அவரது திரைப்பெயராகவும் சூட்டிய தாசரி நாராயண ராவ், அவரது சினிமா வாழ்க்கைக்கு ஒரு அடையாளத்தையும் உருவாக்கினார்.
அந்த அறிமுகத்திற்குப் பிறகு, ஸ்வப்னா தென்னிந்திய திரையுலகில் வேகமாக உயர்ந்தார். மலையாள சினிமாவில் அவர் நடித்த ஆரம்பகால முக்கியப் படங்களில் ஒன்று, மம்மூட்டி கதாநாயகனாக நடித்த ‘த்ரிஷ்ணா’. இந்தப் படம் அவருக்கு பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. குறிப்பாக, ஐ.வி. சசி போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்ததன் மூலம், ஸ்வப்னா முன்னணி நடிகை என்ற இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டார். ‘அஹிம்சா’, ‘உயரங்களில்’, ‘அங்காடிக்கப்புறத்து’ உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
ஸ்வப்னாவின் திரைப்பயணத்தில் பல சுவாரஸ்யமான மற்றும் அபூர்வமான நிகழ்வுகள் உள்ளன. ‘ஒரு திர பின்னையும் திர’ என்ற திரைப்படத்தில், மலையாள சினிமாவின் மாபெரும் நட்சத்திரமான பிரேம் நசீர் மற்றும் அவரது வாரிசான மம்மூட்டி ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடித்தார். இதேபோல், ஒரே ஆண்டில் தந்தை பிரேம் நசீர் மற்றும் அவரது மகன் ஷாநவாஸ் ஆகிய இருவருக்கும் கதாநாயகியாக நடித்த பெருமையும் அவருக்கு உண்டு. இது இந்திய சினிமாவில் அரிதாக நிகழும் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.
மலையாள சினிமாவைத் தாண்டி, ஸ்வப்னா தென்னிந்தியாவின் அனைத்து முக்கிய சூப்பர் ஸ்டார்களுடனும் இணைந்து நடித்துள்ளார். மலையாளத்தில் பிரேம் நசீர், மம்மூட்டி, மோகன்லால்; தமிழில் கமல்ஹாசன் மற்றும் கேப்டன் விஜயகாந்த்; கன்னடத்தில் விஷ்ணுவர்தன் என பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். குறிப்பாக, 1981 ஆம் ஆண்டு வெளியான ‘ஜாதிக்கொரு நீதி’ மற்றும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ ஆகிய படங்களில், கேப்டன் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தது, அவரது தமிழ் சினிமா பயணத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகிறது.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவரது திரைப் பயணத்தில் சுமார் எட்டு திரைப்படங்களில், அவரது கதாபாத்திரத்தின் பெயரும் ‘ஸ்வப்னா’ என்றே அமைந்துள்ளது. இது ஒரு தற்செயலான நிகழ்வாக இருந்தாலும், ரசிகர்களிடையே அந்தப் பெயரை மேலும் பிரபலப்படுத்தியது.
மலையாள சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தபோது, பாலிவுட்டில் தடம் பதிக்க வேண்டும் என்ற கனவுடன் அவர் கேரளாவை விட்டு மும்பை சென்றார். சில இந்தி திரைப்படங்களில் நடித்தாலும், அங்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகளும் வெற்றியும் கிடைக்கவில்லை. 1990 ஆம் ஆண்டு வெளியான ‘கடத்தநாடன் அம்பாடி’ தான் அவர் நடித்த கடைசி மலையாளத் திரைப்படமாக அமைந்தது. அதன் பின்னர், 1993 ஆம் ஆண்டு திருமணத்திற்குப் பிறகு, ஸ்வப்னா திரையுலகிலிருந்து முழுமையாக விலகினார்.
திரையுலகை விட்டு விலகிய பிறகும், அவரது வாழ்க்கை அமைதியாக மட்டும் இல்லை. கணவர் ராமன் கன்னாவுடன் இணைந்து, மும்பையில் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக அவர் உருவெடுத்துள்ளார். ‘சங்கினி என்டர்டெயின்மென்ட்’ (Sangini Entertainment) என்ற நிறுவனத்தின் மூலம், வெளிநாடுகளில் இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார். மேலும், மும்பைக்கு அருகிலுள்ள கர்ஜாத்தில் ‘தி ப்ரூக் அட் கன்னாஸ்’ (The Brook at Khannas) என்ற பெயரில் அழகிய ரிசார்ட்டையும் இந்தத் தம்பதியினர் நடத்தி வருகின்றனர்.
ஒருகாலத்தில் திரையுலகில் கனவுக் கன்னியாக வலம் வந்த ஸ்வப்னா, இன்று தொழில் துறையிலும் தனது தனித்த முத்திரையைப் பதித்துள்ளார். குறுகிய கால சினிமா பயணமாக இருந்தாலும், அபூர்வமான சாதனைகள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த பெருமை, அவரை தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கச் செய்கிறது.
