ஆதார் சேவைக்கு இனி அலைய வேண்டாம்: 2026க்குள் 473 புதிய மையங்கள் – UIDAI அறிவிப்பு
473 என்ற எண்ணை இந்தியர்கள் இனி மறக்க முடியாத அளவுக்கு முக்கியமானதாக மாற்றியுள்ளது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI). நாடு முழுவதும் ஆதார் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், ஆதார் சேர்க்கை மற்றும் புதுப்பிப்பு மையங்களின் எண்ணிக்கையை பெரிதும் உயர்த்தும் திட்டத்தை UIDAI அறிவித்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 88 முழுமையான ஆதார் மையங்கள் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில், இந்த எண்ணிக்கை செப்டம்பர் 2026க்குள் 473 ஆக உயர்த்தப்படும் என்று UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு மிகப்பெரிய நன்மையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆதார் புதுப்பிப்பு அல்லது புதிய சேர்க்கைகளுக்காக பலர் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக கைரேகை, கண் கருவிழி ஸ்கேன், பெயர், புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் மாற்றங்களுக்கு நேரில் ஆதார் மையத்திற்கே செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. புதிய மையங்கள் உருவாகுவதன் மூலம் இந்த சிரமம் பெருமளவு குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளம் குழந்தைகளுக்கான ஆதார் சேர்க்கை தற்போது தபால் நிலையங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நிலையில், பெரியவர்கள் மற்றும் புதிய விண்ணப்பதாரர்களுக்கு இந்த விரிவாக்கம் பெரும் வசதியாக அமையும். முகவரி போன்ற சில விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க முடிந்தாலும், முக்கிய திருத்தங்களுக்கு நேரடி சரிபார்ப்பு அவசியமாக உள்ளது. வரவிருக்கும் 473 முழுமையான ஆதார் மையங்களில் இந்த அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
மேலும், ஆதார் இல்லாத மக்களும், இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினரும், என்ஆர்ஐ-களும் எதிர்கொள்ளும் சிக்கல்களை குறைக்க UIDAI பல தொழில்நுட்ப மேம்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, ஆதார் மையங்களை எளிதில் கண்டறிய கூகுள் நிறுவனத்துடன் UIDAI இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், கூகுள் மேப்ஸ் வழியாக அருகிலுள்ள ஆதார் மையங்களின் இருப்பிடத்தை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
சட்டவிரோத குடியேற்றம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ள சூழலில், புதிய ஆதார் விண்ணப்பதாரர்களுக்கான கள அளவிலான சரிபார்ப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆதார் வழங்குவதற்கு முன்பு, விண்ணப்பதாரர் இந்தியாவில் வசிக்கிறாரா என்பதை மாவட்ட அளவிலான அதிகாரிகள் உறுதி செய்வார்கள். இருப்பினும், ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்று அல்ல என்பதை UIDAI மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
தரவுகளின் துல்லியத்தை உறுதி செய்ய, பிறந்த தேதி மாற்றம் தொடர்பான விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஒரே நபருக்கு இரண்டு பிறந்த தேதிகள் இருக்க முடியாது என்பதால், பிறந்த தேதி திருத்தம் ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படும். தவறான தகவல்கள் வழங்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் UIDAI எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் அடிப்படையில், முன்பு ஒரு வழக்கில் பெற்றோர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதை அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய தூணாக ஆதார் செயல்பட்டு வரும் நிலையில், இந்த விரிவாக்கம் உண்மையான பயனாளிகளுக்கு விரைவான சேவைகளை உறுதி செய்யும் என்றும், தவறான பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடையாள அட்டையைத் தாண்டி, அரசுத் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை பெறுவதற்கான முக்கிய இணைப்பாக ஆதார் மாறியுள்ள நிலையில், UIDAI எடுத்துள்ள இந்த 473 மையங்கள் தொடர்பான முடிவு, ஆதார் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
