பழைய சோறு – நோய்களைத் தடுக்கும் பாரம்பரிய உணவு! அறிவியல் நிரூபிக்கும் முன்னோர்களின் அறிவு.!

60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழறிஞர் ப. நடவரசு பொதுக்கூட்டங்களில் பேசும்போது, மண்பானையில் ஊறவைக்கப்பட்ட பழைய சோற்றின் சுவையை வர்ணிக்கும் விதமே தனித்துவமானதாக இருக்கும். பழைய சோற்றை தட்டில் பிழிந்து வைத்து, அதில் கெட்டித் தயிர் ஊற்றி, இரண்டு உப்புக்கற்கள் சேர்த்து பிசைந்து, மாவடு ஊறுகாயுடன் காலை நேரத்தில் சாப்பிட்டால் கிடைக்கும் ருசியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று அவர் கூறுவார். அந்த உரையை கேட்டவர்களுக்கு உடனடியாக நாவில் உமிழ்நீர் சுரந்து, பழைய சோறு சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழுவது இயல்பாக இருந்தது.

நீண்ட நெடுங்காலமாக பழைய சோறு தான் தமிழர்களின் அன்றாட உணவுப் பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருந்தது. விவசாயப் பணிகளில் ஈடுபட்ட மக்கள், உடல் உழைப்புக்கு தேவையான சக்தியை பெற பழைய சோற்றை முதன்மை உணவாகக் கொண்டிருந்தனர். ஆனால் காலப்போக்கில், அந்த பாரம்பரிய உணவு “கிராமத்து மக்களின் சாப்பாடு” என்ற தவறான கருத்துடன் புறக்கணிக்கப்பட்டது. நாகரிகம் என்ற பெயரில் இட்லி, தோசை, பொங்கல் போன்ற உணவுகள் முன்னணிக்கு வந்தன.

மதியம் ஆவி பறக்கும் சூடான சாதம், குழம்பு, கூட்டு ஆகியவற்றை சாப்பிட்டு வந்த மக்கள், இரவில் சோறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்ற ஆதாரமற்ற அச்சத்தின் காரணமாக சப்பாத்தி, இடியாப்பம் போன்ற உணவுகளுக்கு மாறினர். ஆனால் சமீப கால அறிவியல் ஆராய்ச்சிகள், பழைய சோறு தான் பல நோய்களைத் தடுக்கும் சிறந்த உணவு என்பதை உறுதிப்படுத்தி வருகின்றன.

1780-களில் ஏற்பட்ட பஞ்ச காலத்தில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சார்பில் ஏழை மக்களுக்கு பழைய சோறு வழங்கப்பட்டது. அதனால் அந்த மருத்துவமனை “கஞ்சித் தொட்டி மருத்துவமனை” என்று மக்கள் அழைத்தனர். அதே மருத்துவமனை இன்று பழைய கஞ்சியின் ஆரோக்கிய நன்மைகளை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து, உலகிற்கு எடுத்துச் சொல்வது வரலாற்றின் ஆச்சரியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்டான்லி மருத்துவமனையின் ஆராய்ச்சி மையத்தில் பழைய சோறு குறித்த தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பச்சரிசி, புழுங்கல் அரிசி, மாப்பிள்ளை சம்பா மற்றும் ரேஷன் அரிசி சாதங்களை கோடைகாலத்தில் மண்பானைகளில் 8 முதல் 10 மணி நேரம் வரை, மழைக்காலத்தில் 14 மணி நேரம் வரை ஊறவைத்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஊறவைத்த பழைய சோற்றில் உருவாகும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இரும்புச் சத்தையும் அதிகரிக்கின்றன என்பது கண்டறியப்பட்டது.

ஆராய்ச்சியின் போது, ஊறவைக்கும் முன்பு 100 கிராம் அரிசியில் 3.4 மில்லிகிராம் மட்டுமே இருந்த இரும்புச் சத்து, ஊறவைத்த பிறகு 73.91 மில்லிகிராம் அளவுக்கு உயர்ந்தது என்பது மருத்துவ உலகையே ஆச்சரியப்பட வைத்தது. மேலும், பழைய சோற்றை தொடர்ச்சியாக 55 நோயாளிகளுக்கு காலை உணவாக வழங்கியதில், 13 சதவீதம் பேருக்கு நோயின் அறிகுறிகள் முற்றிலும் மறைந்தன. மற்றவர்களுக்கும் நோயின் தீவிரம் 9 சதவீதம் வரை குறைந்தது.

பழைய சோறு நீரிழிவு நோய் வராமல் தடுப்பதோடு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் போன்றவற்றைத் தடுக்கவும் உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தை ஆரோக்கியமாக வளர உதவுவது, குறைப்பிரசவம் ஏற்படாமல் தடுப்பது, கர்ப்பகால நீரிழிவை கட்டுப்படுத்துவது போன்ற பல நன்மைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வயிற்றுப்போக்கு மற்றும் குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பழைய சோறு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது.

மொத்தத்தில், பழைய சோறு என்பது நோய்களைத் தடுக்கும் உணவு மட்டுமல்ல; வந்த நோய்களை குணமாக்கும் பாரம்பரிய மருந்தாகவும் விளங்குகிறது. இன்றைய அறிவியல் ஆய்வுகள், நமது முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றி வந்த உணவுப் பழக்கங்களின் மகத்துவத்தை மீண்டும் நிரூபித்துள்ளன. இதனால், பழைய சோறு மீண்டும் தமிழர்களின் உணவுப் பட்டியலில் இடம்பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆரோக்கிய நிபுணர்கள் வலியுறுத்துகின்றன