33 ஆண்டுகள் எனக்காக நின்ற ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன்” – மலேசியாவில் விஜயின் உருக்கமான பேச்சு

நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. மலேசியாவின் புக்கட் ஜலீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழா, மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. விஜயின் பேச்சையும் அவரது குட்டிக்கதையையும் நேரடியாக கேட்பதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் திரண்டனர்.

இந்த விழாவில் விஜய்க்கு முன்னதாக பேசிய பல திரையுலக பிரபலங்கள், விஜய் அரசியலுக்கு சென்றாலும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அந்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் விஜய் தனது உரையில் மிக உணர்ச்சிப்பூர்வமான கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

விஜய் பேசுகையில்,
“முதல் நாளில் இருந்தே என்னுடன் பயணித்து வரும் என் ரசிகர்கள், ஒரு நாள் இரண்டு நாள் எனக்காக நிற்கவில்லை. கடந்த 33 ஆண்டுகளாக எனக்காக பல இடங்களில் நின்றிருக்கிறார்கள். அவர்கள் எனக்காக நின்றதால்தான் நான் இன்று இங்கு நிற்கிறேன். அவர்கள் 33 ஆண்டுகள் எனக்காக நின்றார்கள். அடுத்த 30, 33 ஆண்டுகள் நான் அவர்களுக்காக நிற்கப் போகிறேன்,” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர்,
“எனக்கு ஒன்னு என்றால் ரசிகர்கள் தியேட்டரில் நிற்கிறார்கள். இனி அவர்களுக்கு ஒன்னு என்றால், நான் அவர்கள் வீட்டில் நிற்பேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக, நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன். இந்த விஜய் சும்மா நன்றி சொல்லிட்டு போறவன் கிடையாது. நன்றிக்கடனை தீர்த்துட்டு போறவன்,” என்று உருக்கமாக பேசினார்.

விஜயின் இந்த உணர்ச்சிபூர்வமான பேச்சை தொடர்ந்து, புக்கட் ஜலீல் மைதானம் முழுவதும் ரசிகர்களின் உற்சாக ஆரவாரம் அதிர்ந்தது. பலர் கண்ணீருடன் விஜயின் வார்த்தைகளை கேட்ட அந்த தருணம், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவின் மறக்க முடியாத தருணமாக மாறியது.