திருவாதிரை நாளில் இந்த விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி யோகம் கிடைக்குமாம்!
இன்று மார்கழி மாதத்தின் மிக முக்கியமான ஆன்மிக நாளாகக் கருதப்படும் திருவாதிரை நட்சத்திரம். மார்கழி மாதம் தெய்வீக பெருமை மிக்க மாதமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரம் வந்தாலும், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாள் கூடுதல் சிறப்பை பெற்றதாக கருதப்படுகிறது.
இந்த நாளில் நடராஜ பெருமானை தரிசிப்பதே ஆருத்ரா தரிசனம் என அழைக்கப்படுகிறது. காலம் காலமாக இந்த நாளில் நடராஜரை வழிபட்டால் மங்கலமான வாழ்வும், குடும்ப நலனும் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த வருடம் பெளர்ணமி தினத்துடன் இணைந்து ஆருத்ரா தரிசனம் வருவது இன்னும் அதிகமான விசேஷமாகக் கருதப்படுகிறது.
திருவாதிரை விரதம், குறிப்பாக சுமங்கலி பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி யோகம் அளிக்கும் என்று ஐதீகம். தமிழகத்தில் திருமணமான பெண்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காக சோமவார விரதம், காரடையான் நோன்பு, வரலட்சுமி நோன்பு போன்ற விரதங்களை கடைபிடிப்பது வழக்கம். அந்த வரிசையில், மார்கழி பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் இணையும் இந்த நாள் மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த நாளில் சுமங்கலி பெண்கள் விரதம் இருந்து நடராஜரை வழிபட்டால், கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், மார்கழி திருவாதிரை நாளில் தாலி சரடை மாற்றிக் கொள்ளுதல் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, சூரிய உதயத்திற்கு முன் பிரம்ம முகூர்த்தத்தில் கணவர் கையால் தாலி சரடை கட்டிக் கொள்வது சிறப்பானதாக சொல்லப்படுகிறது.
விரதம் இருக்கும் முறை:
இந்த நாளில் அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து, உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் விரதத்தை தொடங்க வேண்டும். பின்னர் கோவிலுக்கு சென்று நடராஜ பெருமானை வழிபட வேண்டும். வீட்டிற்கு திரும்பிய பின், முறைப்படி களி செய்து இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும்.
மஞ்சள் கொண்டு பிள்ளையார் பிடித்து, அருகம்புல், விபூதி, சந்தனம், குங்குமம் ஆகியவற்றுடன் மாங்கல்ய சரடுகளையும் பூஜையில் வைக்க வேண்டும். விரதம் இருக்காதவர்கள் வீட்டில் வடை, பாயாசம், சாதம், சாம்பார், களியுடன் 18 வகை காய்கள் சேர்த்து சாம்பார் அல்லது கூட்டு செய்யலாம்.
நாள் முழுவதும் உபவாசம் இருந்து, மாலை வீட்டில் விளக்கேற்றி குலதெய்வத்திற்கு படையல் இட்டு, அதை கணவருக்கு உணவாக வழங்க வேண்டும். இந்த நாளில் உணவு தானம் செய்வது கூடுதல் புண்ணியமாகக் கருதப்படுகிறது.
இந்த விரதத்தை முறையாக கடைபிடிப்பவர்கள் சிவ–பார்வதி அருளைப் பெற்று, தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் பெறுவார்கள் என்பது மக்களின் ஆழ்ந்த நம்பிக்கையாக உள்ளது. சுமங்கலி பெண்கள் அனைவரும் இந்த திருவாதிரை நோன்பை கடைபிடித்து, நடராஜரை தரிசித்து மங்கலமான வாழ்வை பெறலாம்.
