வங்கதேச அரசியலின் இரும்புப் பெண்மணி… அதிகாரம், சிறை, போராட்டம் – கலீதா ஜியாவின் முழு அரசியல் வாழ்க்கைபிரிவு:

வங்கதேச அரசியலில் தவிர்க்க முடியாத பெயராக விளங்கிய முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா, நீண்டநாள் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் காலமானார். அவரது மறைவு, வங்கதேச அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயத்தின் முடிவாக பார்க்கப்படுகிறது. பல தசாப்தங்களாக அதிகார அரசியல், போராட்டம், சிறை வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட துயரங்கள் ஆகியவற்றை சந்தித்த ஒரு வலிமையான அரசியல் தலைவியாக கலீதா ஜியா அறியப்பட்டவர்.

1945ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் பிறந்த கலீதா ஜியா, இந்தியப் பிரிவினையின் போது தனது குடும்பத்துடன் வங்கதேசத்துக்கு குடிபெயர்ந்தார். சாதாரண தேனீர் வியாபாரியின் மகளாக வாழ்க்கையை தொடங்கிய அவர், அரசியல் உச்சத்துக்கு உயர்ந்தது பலருக்கும் ஆச்சரியமான பயணமாக அமைந்தது. 15 வயதிலேயே ராணுவ வீரரான ஜியாவுர் ரஹ்மானை திருமணம் செய்துகொண்ட கலீதா ஜியாவின் வாழ்க்கை, அதன் பின்னர் வங்கதேச அரசியலோடு பின்னிப்பிணைந்தது.

1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் முக்கிய பங்கு வகித்த ஜியாவுர் ரஹ்மான், பின்னர் நாட்டின் அரசியல் தலைவராக உருவெடுத்து, 1977ஆம் ஆண்டு தன்னை பிரதமராக அறிவித்தார். ஆனால், 1981ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கலீதா ஜியாவின் வாழ்க்கை திசைமாறியது. கணவரின் கொலைக்குப் பிறகு அரசியலில் நேரடியாக களமிறங்கிய அவர், 1984ஆம் ஆண்டு வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவராக பொறுப்பேற்றார்.

1991ஆம் ஆண்டு வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற கலீதா ஜியா, 1996 வரை ஆட்சியில் இருந்தார். அதன் பின்னர் 2001 முதல் 2006 வரை மீண்டும் பிரதமராகப் பதவி வகித்தார். பாகிஸ்தானின் பெனசீர் பூட்டோவுக்குப் பிறகு ஒரு முஸ்லிம் நாட்டை வழிநடத்திய இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. அவரது ஆட்சிக் காலத்தில் கல்வி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

குறிப்பாக, தொடக்கக் கல்வியை இலவசமாகவும் கட்டாயமாகவும் மாற்றியதுடன், 10ஆம் வகுப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி, பள்ளி மாணவர்களுக்கான உணவுத் திட்டம், அரசுப் பணிகளுக்கான வயது வரம்பை 27இல் இருந்து 30ஆக உயர்த்தியது போன்ற நடவடிக்கைகள் அவரது ஆட்சியின் முக்கிய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. அதிகப்படியான கல்வியறிவு இல்லாத நாட்டில் கல்வியை முன்னிலைப்படுத்திய தலைவராக அவர் நினைவுகூரப்படுகிறார்.

ஆனால், அவரது அரசியல் வாழ்க்கை எளிதானதாக இருக்கவில்லை. எதிர்க்கட்சியான அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவுடன் நீண்டகால அரசியல் மோதல், வன்முறைகள், வேலைநிறுத்தங்கள் மற்றும் தொடர்ச்சியான போராட்டங்கள் அவரது ஆட்சிக்காலத்தை சிக்கலானதாக மாற்றின. 1996ஆம் ஆண்டு மீண்டும் பதவியேற்றபோதும், ஒரு மாதத்திற்குள் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 2007ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், 2018ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சிக்காலத்தில் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு ஆளானார்.

சிறை வாழ்க்கையின் போது கலீதா ஜியாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. நீரிழிவு, இதயக் கோளாறு, நுரையீரல் தொற்று, கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு என பல நோய்களால் அவதிப்பட்டார். சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்ததால் தொடர்ந்து டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தார். சுவாசப் பிரச்சினை மோசமடைந்த நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் அவர் நீண்ட காலம் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றார்.

இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு அமைந்த பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், அவரது உடல்நிலை சீராகவில்லை. லண்டனுக்கு கொண்டு செல்ல முயற்சி செய்யப்பட்ட நிலையில், மருத்துவ அனுமதி கிடைக்காததால் அது சாத்தியமாகவில்லை. இறுதியில் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவர் உயிரிழந்தார்.

கலீதா ஜியாவின் மறைவுக்கு முன், அடுத்தாண்டு நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மகன் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பி தேர்தலில் போட்டியிட முன்வந்தார். தாயை மருத்துவமனையில் சந்தித்து நீண்ட நேரம் செலவிட்ட சில நாட்களுக்குப் பிறகே இந்த சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தின் ஆறாவது பிரதமராகவும், முதல் பெண் பிரதமராகவும், அரசியல் போராட்டங்களின் மையப் புள்ளியாகவும் விளங்கிய கலீதா ஜியா, ஆதரவாளர்களுக்கு ஒரு போராளி, விமர்சகர்களுக்கு சர்ச்சையான தலைவர். ஆனால், சந்தேகமே இல்லாமல், வங்கதேச அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத தடம் பதித்த ஒரு முக்கிய ஆளுமை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.