“ரஜினியுடன் ஒரே இடத்துக்கு போனது பெரிய விஷயமா ஆகிடுச்சு!” – நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகை லதா.!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், டிசம்பர் 12ஆம் தேதி தனது 75வது பிறந்த நாளை கொண்டாடினார். ‘ஜெயிலர் 2’ உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தயாராக இருக்கும் ரஜினி, தற்போது பக்குவமான பேச்சும் அமைதியான அணுகுமுறையும் கொண்டவராக ரசிகர்களிடம் பாராட்டைப் பெறுகிறார். ஆனால் அவரது இளமைக்காலம் சினிமா உலகில் பல கிசுகிசுக்களால் நிறைந்த காலமாக இருந்தது.
30 வயதுக்கு அருகிலிருந்த ரஜினிகாந்த், அப்போது யாருக்கும் அஞ்சாமல் மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவராக இருந்தார். இதன் காரணமாகவும், அவரது வேகமான வளர்ச்சியாலும், சில நடிகைகளுடன் அவரை இணைத்து பல கிசுகிசுக்கள் எழுந்தன. அதில் முக்கியமானது நடிகை லதாவுடன் தொடர்புடைய செய்திகள்.
“ஒரு கோயில் பயணம்… அவ்வளவுதான்!”
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், மூத்த நடிகை லதா, அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது:
“நான், ரஜினிகாந்த், விஜயகாந்த் – மூன்று பேரும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் நடித்தோம். அந்தப் படத்தின் ஷூட்டிங் நேரங்களில் எல்லாம் நாங்கள் மிகவும் ஜாலியாக பேசிக்கொண்டிருப்போம்.”
மேலும் அவர் கூறுகையில்,
“ஒரு முறை நாங்கள் பழனி முருகன் கோயிலுக்கு சென்று வந்தோம். அதையே பெரிய விஷயமாக்கிவிட்டார்கள். நல்ல வேளை அந்த காலத்தில் இப்போது போல யூடியூப், சமூக வலைதளங்கள் இல்லை. இல்லையென்றால் என்னென்னவோ பேசியிருப்பார்கள்,” என்று சிரித்தபடி தெரிவித்தார். இப்போது எல்லாம் கடந்துவிட்டோம்”
அந்த காலகட்டத்தில் எழுந்த கிசுகிசுக்கள் காரணமாக, ரஜினிகாந்தின் மனைவி லதாவுக்கு பெண் கொடுப்பதில்கூட குடும்பத்தினர் யோசித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் அனைத்தும் மாறிவிட்டதாக நடிகை லதா கூறுகிறார்.
“அந்த எல்லாவற்றையும் தாண்டி வந்துவிட்டோம். இப்போது நாங்கள் எல்லோரும் நல்ல குடும்ப நண்பர்களாக இருக்கிறோம்.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு தலைக்கனம் இல்லாத மனிதர் யார் என்றால், அது ரஜினிகாந்த்தான்,” என்று நடிகை லதா ரஜினியை மனதார பாராட்டியுள்ளார்.
நடிகை லதாவின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரஜினியின் பழைய கால நினைவுகளை ரசிகர்கள் மீண்டும் பேசத் தொடங்க வைத்துள்ளது.
