பொங்கல் பரிசு ரூ.4,000ஐ வீணாக்காதீர்கள்! சரியான முதலீட்டால் எதிர்காலத்தை பாதுகாக்கும் வழிகள்.
தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அறிவித்துள்ள பரிசுத் தொகை, மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசாகவும், மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 மாதாந்திர உதவியும் ஜனவரி மாதம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் ரூ.4,000 தொகை பல குடும்பங்களுக்கு கிடைக்கிறது. பண்டிகை கால செலவுகளுக்கு இந்த தொகை உதவியாக இருந்தாலும், அதை முழுவதும் செலவு செய்யாமல், சரியான முறையில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல சேமிப்பாக மாற்ற முடியும் என நிதி நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பொதுவாக, அரசு வழங்கும் உதவித் தொகைகள் தற்காலிக நிவாரணமாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், அந்த தொகையை திட்டமிட்டு சேமிப்பு மற்றும் முதலீட்டில் பயன்படுத்தினால், அது குடும்பத்தின் நீண்டகால நிதி பாதுகாப்புக்கு அடித்தளமாக அமையும். குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சிறிய தொகைகளே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், ரூ.4,000ஐ பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம். அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு, வங்கி வைப்பு நிதி (Fixed Deposit – FD), ரெக்கரிங் டெபாசிட் (RD) போன்றவை இதற்கான சிறந்த தேர்வுகள். தற்போது பல வங்கிகளில் 5 ஆண்டுகளுக்கான FD-க்கு 7 முதல் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. ரூ.4,000ஐ 5 ஆண்டுகளுக்கு FD-யில் வைத்தால், அது ரூ.6,000க்கும் அதிகமாக மாற வாய்ப்புள்ளது.
அதேபோல், ரெக்கரிங் டெபாசிட்டில் மாதம் ரூ.333 மட்டுமே செலுத்தினாலும், 5 ஆண்டுகளில் ஒரு நல்ல தொகை சேரும். குறிப்பாக, மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 கிடைப்பதால், அதில் ஒரு பகுதியை RD-யில் செலுத்தினால், வருடத்திற்கு ரூ.12,000 சேமிப்பாக மாறும். இது அவசர தேவைகளுக்கும், குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கும் உதவியாக இருக்கும்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம், நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான திட்டமாகும். இதில் தற்போது 7.1 சதவீத வரி இல்லா வட்டி வழங்கப்படுகிறது. 15 ஆண்டு லாக்-இன் காலம் இருப்பதால், உடனடி பணத் தேவைக்கு இது ஏற்றதாக இல்லாவிட்டாலும், எதிர்கால ஓய்வு காலத்திற்கான சேமிப்புக்கு இது ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. பொங்கல் பரிசுத் தொகையை PPF கணக்கில் செலுத்துவது, நீண்டகால நிதி ஒழுங்கை உருவாக்க உதவும்.
கொஞ்சம் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை தேர்வு செய்யலாம். ரூ.4,000ஐ ஒரே தொகையாக (Lump Sum) ஃப்ளெக்ஸி கேப் அல்லது ஸ்மால் கேப் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். க்ரோ, ஜீரோதா காயின் போன்ற டிஜிட்டல் ஆப்புகள் மூலம் ரூ.100 முதல் கூட முதலீடு தொடங்க முடியும். கடந்த 10 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்டுகள் சராசரியாக 12 முதல் 18 சதவீதம் வரை வருமானம் வழங்கியுள்ளன.
நீண்டகாலமாக, 7 முதல் 10 ஆண்டுகள் வரை முதலீட்டை தொடர்ந்தால், ரூ.4,000 முதலீடு ரூ.12,000 முதல் ரூ.20,000 வரை வளர வாய்ப்பு உள்ளது. குறுகிய காலத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், நீண்டகாலத்தில் பணவீக்கத்தை எதிர்கொள்ள மியூச்சுவல் ஃபண்டுகள் உதவுகின்றன. முதலுக்கு முழு இழப்பு ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதே இதன் முக்கிய பலமாகும்.
அதிக ரிஸ்க் எடுக்க விரும்புவோர், பங்குச் சந்தையில் நல்ல அடிப்படை கொண்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம். ரூ.4,000ஐ ஒரே பங்கில் முதலீடு செய்வதைவிட, பல பங்குகளில் பிரித்து முதலீடு செய்வது பாதுகாப்பானது. இதற்கும் க்ரோ, ஜீரோதா போன்ற ஆப்புகள் உதவுகின்றன.
அதேபோல், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர், தங்க ETF அல்லது தங்க நாணயம் வாங்கலாம். கடந்த 5 ஆண்டுகளில் தங்கம் ஆண்டுக்கு சராசரியாக 12 சதவீதம் உயர்ந்துள்ளது. ரூ.4,000 மதிப்பில் 1 கிராம் தங்க நாணயம் வாங்குவது, பாதுகாப்பும் மதிப்பு உயர்வும் தரக்கூடிய முதலீடாக கருதப்படுகிறது.
சேமிப்புடன் சேர்த்து, பாதுகாப்பும் அவசியம். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) வழங்கும் தனிநபர் விபத்து காப்பீடு போன்ற திட்டங்கள், குறைந்த பிரீமியத்தில் அதிக பாதுகாப்பை அளிக்கின்றன. ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு ஆண்டு பிரீமியம் ரூ.355 மட்டுமே என்பதால், பொங்கல் பரிசுத் தொகையின் ஒரு பகுதியை இதற்காக பயன்படுத்தலாம்.
மொத்தமாக, ரூ.4,000 என்பது சிறிய தொகையாக தோன்றினாலும், சரியான திட்டமிடலுடன் முதலீடு செய்தால் அது எதிர்காலத்தில் பெரிய சேமிப்பாக மாற முடியும். “சின்ன கல்லு பெத்த லாபம்” என்பதுபோல், இன்று சேமிக்கும் சிறிய தொகை, நாளைய நிதி பாதுகாப்புக்கு அடித்தளமாக அமையும் என நிதி நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த பொங்கல் பரிசுத் தொகையை திட்டமிட்டு முதலீடு செய்வதால், மக்கள் தினசரி செலவுகளை சமாளிப்பதோடு, எதிர்காலத்தில் நிதி சுதந்திரத்தை அடைய முடியும் என்பது முக்கியக் குறிப்பு.
