விஜயின் காரை வழிமறித்த தவெக பெண், நிர்வாகி அஜிதா தற்கொலையா?? கட்சியில் பரபரப்பு.!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட திருச்சி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக எழுந்த சர்ச்சை, தற்போது அதிர்ச்சி தரும் சம்பவமாக மாறியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல் என்ற பெண் நிர்வாகி, தனது பெயர் மாவட்ட செயலாளர் பட்டியலில் இடம்பெறாததை கண்டித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பனையூர் அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து கேள்வி எழுப்பினார். பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்ததாகவும், தனக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், நடிகர் விஜயை நேரில் சந்தித்து பேச முயன்ற அஜிதா, விஜயின் கார் அலுவலகத்திற்கு வந்தபோது காரை வழிமறித்து பேச முயன்றார். ஆனால் விஜய் நேரடியாக அலுவலகத்திற்குள் சென்றுவிட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து, தவெக முக்கிய நிர்வாகி சிடி நிர்மல் குமார் அஜிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவருக்கு உரிய பொறுப்பு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அஜிதா தனது போராட்டத்தை கைவிட்டார். ஆனால், இந்த சம்பவம் தவெக நிர்வாகிகள் மற்றும் சில கட்சி ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் அஜிதாவை நோக்கி கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சிலர் அவரை எதிர்க்கட்சியின் ஆதரவாளர் என குற்றம் சாட்டியும் பதிவுகள் வெளியிட்டனர்.
இதற்கு பதிலளித்த அஜிதா, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில்,
“உயிர் உள்ளவரை தவெகவில்தான் இருப்பேன். தளபதிதான் என் தலைவர். கடைசி மூச்சு உள்ளவரை கட்சிக்காக உழைப்பேன்”
என்று பதிவிட்டிருந்தார். இருப்பினும், அவரை குறிவைத்து சமூக வலைதள விமர்சனங்கள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிர்ச்சி தரும் வகையில் அஜிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அஜிதாவின் குடும்பத்தினர் கூறுகையில்,
“தொடர்ந்து ‘திமுகவின் கைக்கூலி’ என்று சமூக வலைதளங்களில் சொல்லி மன அழுத்தம் ஏற்படுத்தியதால்தான் இந்த நிலை ஏற்பட்டது” என்று ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழக வெற்றிக் கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கட்சி தலைமையகம் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
