சரிந்து விழுந்த தளபதி விஜய்.. தள்ளி விட்டார்களா? வைரலாகும் வீடியோ குறித்து என்ன நடந்தது?
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவை வெற்றிகரமாக முடித்துவிட்டு, விஜய் நேற்று (28ம் தேதி) சென்னை திரும்பினார். அவர் சென்னை விமான நிலையத்திற்கு வருவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் விமான நிலையத்தில் திரண்டனர்.
வார இறுதி நாள் என்பதால், ஏற்கனவே கூட்டம் அதிகமாக இருந்த சென்னை விமான நிலையத்தில், விஜயை காண ரசிகர்கள் சூழ்ந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, பாதுகாவலர்களின் துணையுடன் தனது காரை நோக்கி விரைந்து சென்ற விஜய், நிலை தடுமாறி சரிந்து கீழே விழுந்தார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, பிரபல திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி, நீல நிற சட்டை அணிந்த ஒருவர் விஜயை தள்ளி விட்டதாக தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் வைரலாகும் வீடியோவை கவனமாக பார்க்கும்போது, நீல நிற சட்டை அணிந்த நபர் விஜயை நேரடியாக தள்ளுவது போல் தெளிவாக தெரியவில்லை என்றும் சில இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர் அருகில் இருந்த மற்றொரு நபரை தள்ள முயன்ற போது, அதே நேரத்தில் விஜய் சமநிலை இழந்து கீழே விழுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
விஜய் சரிந்து விழுந்தது கூட்ட நெரிசலால் ஏற்பட்டதா, அல்லது அவரை யாராவது தள்ளி விட்டார்களா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், விழுந்த பின்னர் விஜய் உடனடியாக எழுந்து தனது காரில் பாதுகாப்பாக புறப்பட்டுச் சென்றார்.
ஜன நாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள நிலையில், இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சிறிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
