ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு: நம்பெருமாளின் “கோவிந்தா, ரங்கா” முழக்கத்தில் பக்தர்கள் ஆழ்ந்த ஆசீர்வாதம் பெற்றனர்.!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று பரமபதவாசல் திறப்பு நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் பக்தர்களுக்குக் காட்சி அளிக்க புறப்பட்டார். ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை மற்றும் கிளிமாலை போன்ற ஆபரணங்களில் அலங்கரிக்கப்பட்ட நம்பெருமாள், இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்களை வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வந்தார்.
அதிகாலை 5:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா… ரங்கா…” என்ற முழக்கங்களுடன் நம்பெருமாளை வரவேற்றனர். சொர்க்கவாசலை கடந்த பிறகு நம்பெருமாள் மணல்வெளி மற்றும் திருக்கொட்டகை வழியாக ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்திற்கு வந்தார். அங்கு அவர் நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார், பின்னர் அதிகாலை 1:15 மணிக்கு மீண்டும் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இந்த ஆண்டு 2025-ம் ஆண்டில் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் இரண்டு முறை திறக்கப்பட்டிருப்பது அரிதான நிகழ்வாகும். முதல் முறையாக கடந்த மார்கழி மாத விழாவில் ஜனவரி 10ம் தேதி திறக்கப்பட்டது. இரண்டாம் முறையாக டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்ட சொர்க்கவாசல் 9 நாட்கள் திறந்திருக்கும். விழா நாட்களில் மூலவர் ரங்கநாதர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார். வரும் ஜனவரி 9-ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.
