பெண்கள் சேலை தான் அணிய வேண்டும் என்றாரா? – தெலுங்கு நடிகர் சிவாஜியின் சர்ச்சை பேச்சுக்கு சின்மயியின் கடும் கண்டனம்.!
தெலுங்கு சினிமாவில் நடிகராகவும், சமீபத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமானவராகவும் அறியப்படும் நடிகர் சிவாஜியின் கருத்து ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் அணியும் ஆடை குறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, பாடகி சின்மயி வெளியிட்ட கண்டன பதிவு இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது
‘மிசம்மா’, ‘சத்யபாமா’, ‘கோர்ட் – ஸ்டேட் vs ஏ நோபடி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சிவாஜி, தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாவது ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றதன் மூலம் அதிக கவனம் பெற்றார். தற்போது அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தண்டோரா’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதன் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த படத்தை ரவீந்திர பானர்ஜி முப்பனேனி தயாரித்துள்ளதுடன், முரளிகாந்த் இயக்கியுள்ளார். பிந்து மாதவி, நவ்தீப், நந்து, ரவி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சிவாஜி, பெண்களின் ஆடை குறித்து கருத்து தெரிவித்தது தான் தற்போது சர்ச்சையின் மையமாக உள்ளது. அவர் பேசுகையில், “எல்லா கதாநாயகிகளும் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும். உடல் பாகங்களை வெளிப்படுத்தும் விதமான உடைகள் அழகு அல்ல. உண்மையான அழகு சேலை போன்ற உடைகளை அணியும் போதுதான் தெரிகிறது” என்று கூறினார். மேலும், “மக்கள் வெளிப்படையாக சொல்லாமல் இருக்கலாம். ஆனால் உடலை வெளிப்படுத்தும் உடைகளை அவர்கள் விரும்பாமல் இருக்கலாம். ஒரு பெண் இயற்கையைப் போன்றவள். இயற்கையை நாம் மதிப்பது போல, பெண்களையும் மதிக்க வேண்டும். ஒரு பெண் என் தாய் போன்றவள்” என்று அவர் பேசியது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், நடிகைகள் சாவித்ரி, செளந்தர்யா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் உடை அலங்காரத்தை எடுத்துக்காட்டாக கூறிய சிவாஜி, அவர்கள் உடை அணிவதன் மூலம் தான் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, “சுதந்திரம் மிகவும் விலைமதிப்பற்றது. அதை இழக்காதீர்கள். உங்கள் நடத்தை மற்றும் தோற்றத்தை வைத்து தான் மக்கள் உங்களை மதிப்பார்கள்” என்றும் கூறினார். இந்த கருத்துகள் பெண்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் இருப்பதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாடகி சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவு பெரும் கவனம் பெற்றுள்ளது. நடிகர் சிவாஜியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், “பெண்கள் குறித்து சிவாஜி பேசியது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் ஜீன்ஸ் மற்றும் ஹூடி அணிந்திருக்கிறார். அப்படியானால் அவர் வேட்டி மட்டும் அணிய வேண்டும். இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும். பொட்டு வைக்க வேண்டும். திருமணமானவராக இருந்தால் கங்கணம், மெட்டி அணிய வேண்டும்” என்று கிண்டலுடன் விமர்சித்துள்ளார்.
மேலும், “பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது நம்பவே முடியவில்லை” என்று சின்மயி குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பெண்களின் உடை, நடத்தை குறித்து ஆண்கள் அறிவுரை கூறுவது தவறானது என்றும், ஒருவரின் ஆடை அவர்களின் குணத்தை நிர்ணயிக்காது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தற்போது சினிமா வட்டாரத்தை தாண்டி, சமூக அளவிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் சுதந்திரம், உடை தேர்வு, தனிநபர் உரிமை போன்ற விஷயங்களில் மீண்டும் ஒரு முறை தீவிரமான விவாதத்தை இந்த சம்பவம் தூண்டியுள்ளது. நடிகர் சிவாஜி தனது கருத்துக்கு விளக்கம் அளிப்பாரா அல்லது மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
