2026: (Donkey)கழுதையைப் போல் சுமந்து பழகுங்கள்.! மாறும் மனிதன் மாறா மிருகம் புத்தகத்திலிருந்து இயக்குனர் & எழுத்தாளர் ரவிபார்கவன்.!
எதை..? பொதியையா? (Donkey)கழுதை நன்றாக பொதி சுமக்கும். பொதி என்பது சரிசமமாகக் கட்டப்பட்ட அழுக்குத்துணிகளின் அம்பாரம். ஆக, ஒரு நல்ல சலவைக் கலைஞன் மிகத் துல்லியமாக இருபக்கமும் சுமைகளை அடுக்குவான்! வலதுபுறமும், இடதுபுறமும் தொங்கும் பொதி ஒரே எடையில் இருக்கும். ஒரு கைக்குட்டை கூட அதிகமாக ஒருபுறம் இருக்காது! ஒரே எடையில் இருக்கும்.
Facebook
Instagram
YouTube
Twitter
இருபுறமும் ஆயிரம் கிலோ சுமக்கும். ஆனால் ஒருபுறம் ஆயிரம் கிலோ, இன்னொரு புறம் ஆயிரத்தொன்று என்றாலும் கழுதை சண்டித்தனம் செய்யும்! நடப்பதை, வேகத்தைக் குறைக்கும். ஆங்காங்கே நின்றுவிடும்!
ஒருபுறம் சந்தோஷ மூட்டையாக இருந்தாலும், இன்னொரு புறம் துன்ப மூட்டையாக இருந்தாலும், அதை ஒரே அளவில் எடுத்துக் கொண்டு தன்பாட்டிற்கு சுமந்து கொண்டு போகும்!
ஒரு புறம் உப்பும், மறுபுறம் சர்க்கரை என்றாலும், சர்க்கரையோ உப்போ எதுவாகினும் சமமாகப் பாவிக்கும்!
மலைவாழ் (Donkey)கழுதைகள் கூட இந்தச் சுமை அளவுகளை மாற்றுவது இல்லை! லடாக் போன்ற இன்ட்டீரியர் பகுதிகளில் அதாவது… மலைகளின் உட்கிராமத்தில் இருபுறமும் குழந்தைகளைச் சுமக்கும்.
குழந்தைகளைச் சுமக்கும் போது அதில் புத்தக மூட்டைகளை வைக்க முடியாது. புத்தக மூட்டைகளைத் தனிக் (Donkey)கழுதை சுமக்கும்.
அடுத்த நாள்… குழந்தைகளைச் சுமக்கும் கழுதைக்குப் புத்தக மூட்டைகளை வைக்க முடியாது! ‘நான் இதுவரை உயிரைச் சுமந்தவன்… ஜடப்பொருளை சுமக்கமாட்டேன்!’
நாம்... உயிருள்ளவைகளையும், ஜடப் பொருள்களையும் பாகுபாடின்றி சுமக்கிறோம்!! பிள்ளைக்குப் பிள்ளை வேண்டும். பிள்ளைகளுக்கு பேரன் வேண்டும். மகளுக்கு குழந்தை இல்லை என்றால் கண்ணீர்! மருமகளுக்கு குழந்தை இல்லை என்றால் விலக்கி வைத்தல்!
சரி, உயிர்ப் பொருட்கள் திருப்தியாக இருக்கிறது. அந்த உயிர்ப் பொருட்களுக்கு ஜடப்பொருட்களை சேர்க்க வேண்டும்! மகனுக்கு ஒரு வீடு இருக்கிறது மகளுக்கு இல்லையே..? அவர்கள் தலைமுறை வாழ வேண்டுமே... உயிரையும் ஜடத்தையும் சேர்ந்து சுமப்பது! அதற்காய்க் கண்ணீர் விடுவது!
(Donkey)கழுதைக்கு இன்னொரு விளக்கமும் உண்டு. அழுக்கு மூட்டைகளை, பாவ மூட்டைகளை சுமப்பது. ‘எந்த ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணியதோ… இந்தக் கழுதைகள் பாவ மூட்டைகளைச் சுமக்கிறது!’
எந்தக் கழுதையும் வந்து ‘என் முதுகில் அழுக்கு மூட்டைகளை ஏற்றி விடு’ என்று சொல்லாது. பாவ மூட்டைகளை நீ ஏற்றி விட்டு சுமக்கும் கழுதைகள் மீது குற்றம் சுமத்துகிறாய்!
சரி, அடுத்த பாயின்ட், தாங்கிக் கொள்ள முடியாத சுமைகளை இலக்குதனை அடையும் வரை நிற்காமல் சுமந்து சென்று இலக்கை அடைந்து இறக்கி வைக்கும், காத்திருக்கும். சலவைக் கலைஞன் இறக்கியதும் கழுதைகள் உட்காருவதில்லை!
‘இவன் துணியைத் துவைப்பான், மீண்டும் சுமந்து கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது நமது கடமை’ என்பதைப் போலவே நின்று கொண்டிருக்கும்!
மனிதனைப் போல பொறுப்புக்களை... தட்டிக் கழிக்காது! பாதியிலயே சுமைகளை இறக்கிப் போட்டு விட்டு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு ஓடிப் போகாது!! ‘தினமும் இவ்வளவு சுமக்கிறேன் உனக்காக, எனக்குக் கூலி எவ்வளவு?’ என்று கேட்காது!
கூலி கொடுக்கவில்லை என்றாலும் திட்டாது! புறம் பேசாது! பேப்பர் ரோஸ்ட் கேட்காது! போஸ்டர்ஸ் பேப்பர் போதும்! அது, ‘இயேசு அழைக்கிறார்’ போஸ்டராக இருந்தாலும் சரி, ‘ஷகிலா’ போஸ்டராக இருந்தாலும் சரி, ‘பிரதமர் அழைக்கிறார்’ போஸ்டராக இருந்தாலும் சரி, ‘பக்ரீத் பெருவிழா’ போஸ்டராக இருந்தாலும் சரி,சலவைக் கலைஞனை எதிர்பார்க்காது!
சரி, இரண்டு கால்களையும் கட்டி வைக்கிறோமே? கோபம் வந்தால் தாடைகளைப் பேர்த்து விடும்! ஒரே உதை! – ஒரு பல் மிஞ்சாது!
உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுத்தால் கழுதை ஏன் உதைக்கிறது!?
உனக்குக் குற்றம் உள்ள நெஞ்சு, சுமக்கும் கழுதைகளைக் கட்டி வைக்கிறாய்!
அக்கா, தங்கையோடு பிறந்திருக்கிறாயா? கடைசிவரை கழுதைபோல் சுமங்கள்!
மகனே இல்லாமல் மகளைப் பெற்றுவிட்டாயா..? இறுதிவரை சுமங்கள்!
(Donkey)கழுதையைப் போல் சுமந்து பழகுங்கள்
கொடுமையின் உச்சமாக ஒரு மனைவியைக் கட்டிக் கொண்டாயா… சுடுகாடு வரை சுமங்கள்!
சுமப்பதற்கு ஒருபோதும் அஞ்சாதீர்கள்!
மனிதன் பிறக்கும் போதே சுமைகளோடுதான் பிறக்கிறான்.
அது… பெரும் பொதி!
பிறவிப்பொதி!
பிறவிச் சுமை!
காலம் அனுமதிக்கும் வரை…
‘சுமந்தது போதும்’ என்று காலம் அனுமதிக்கும் வரை,
கழுதைகளைப் போல் சுமங்கள்!!
