2026: நான் நல்ல பிள்ளையா??? இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டறிய நான் ஒரு குழந்தையாகவே மாறி, அந்தக் குழந்தையின் மனதில் எழும் சந்தேகங்களை முன் வைக்கிறேன்.

“டேய் அதைத் தொடாதே சாமி கண்ணைக் குத்தும்” என்பாள் அம்மா.
நான் குழந்தையாகக் கேட்பது. தொட்டா சாமி கண்ணைக் குத்தும்னா அந்தப் பொருளை சாமி ஏன் உருவாக்குது?
“டேய் அங்க போகாத பூச்சாண்டிகிட்ட புடிச்சுக் குடுத்துடுவேன்”

Facebook
Instagram
YouTube
Twitter

நான் குழந்தையாக நினைப்பது ‘அந்தப் பூச்சாண்டியாவது நம்ம விருப்பபடி நடந்துக்குவானா?’
மண்ணைத் தின்றால் கையிலும், வாயிலும் போட்டு அடிக்கிறீங்களே… எல்லாக் குழந்தைகளுமா மண்ணைத் தின்கிறது? நான் மண்ணைத் தின்கிறேன் அல்லது சாக்பீசையும், பல்பத்தை தின்கிறேன் என்றால்… நான் பிறக்கும் போது கால்சியம் குறைபாட்டோடு பிறந்திருக்கிறேன் என்று அர்த்தம்! பெற்றோர்கள் குழந்தையை ஒரு நல்ல மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போய்க் காட்டுவீர்கள் என்றால், அவர் குழந்தைக்கு கால்சியம் குறைபாடு இருக்கிறது என்பது குறித்து விவரமாகச் சொல்வார். அதை விட்டுவிட்டு எப்பப் பார்த்தாலும் அடிச்சு, அடிச்சு பல்பம் தின்பதை தடுக்க முயற்சிப்பீங்க! அப்ப நான் எப்படி நல்ல குழந்தையா வளர முடியும்…?

அடுத்து, ‘யார் கூடயும் சண்டை போடக்கூடாது’ சரி, சண்டை போடல! எனக்கு போகோ சேனல்ல ஏன் டாம் அன்ட் ஜெர்ரியைக் காண்பிக்கிறீர்கள்..? எலியை அந்த டாம் பூனை எப்படியெல்லாம் சித்ரவதை செய்ய வேண்டும். பதிலுக்கு பூனை எப்படி எல்லாம் துவம்சம் செய்ய வேண்டும் என்று ஜெர்ரி எலியும் மல்லுக் கட்டிக் கொண்டு நிற்கிறது! ‘என் பிள்ளைப் பிராயத்தில் வன்முறை டாம் அன்டு ஜெர்ரியிலிருந்து துவங்குகிறது’ – உங்களுக்குத் தெரியுமா பெற்றோரே?
‘என் செல்லம் எப்பப்பாரு டபிள்யு டபிள்யூ எப் தான் பார்ப்பான்.’ அட பெற்றோர்களே..!

ஒரு சின்ன ஜட்டியைப் போட்டுக் கொண்டு மலை மாதிரி இரண்டுபேர் மேல ஏறி ஏறி விழுகிறான். தகரச் சேரைத் தூக்கி அடிக்கிறான்! நடுவில் ஒருவன் நின்று கொண்டு மேலே மேலே கையைத் தூக்குகிறான். சுற்றி ஆயிரம் பேர் குழந்தைகளோடு அமர்ந்து கொண்டு அதை ரசிக்கிறார்களே… எனது வன்முறை பிள்ளைப் பிராயத்தில்… அங்கு ஆரம்பமாகிறது!
“என்னடி பிள்ளையைப் பெத்து வைச்சிருக்கே, கோமாளி மாதிரியே சுத்தறானே” இது அப்பா.

“உங்க வம்சமா இருக்கும்” இது அம்மா.
“ஏண்டி எங்க வம்சமெல்லாம் கோமாளிப்பய மாதிரியா தெரியுது”
பாத்திரங்கள் பறக்கும்! அடிதடி எல்லாம் நடக்கும்! வீடு அமைதியான பின், என் அம்மா என்னை நடுவுல போட்டுட்டு கட்டித் தழுவி, குப்புறப் படுத்துக் கொள்வாள். என்னைத் தாண்டி அப்பா தன் கையைப் போடுவார். ‘என் அம்மாவின் மேல் ராசியாகப் பார்க்கிறாராம்.’ “எனக்குக் கெட்ட கோபம் வரும்.” இது அம்மா. நான் இளிச்சவாயன் மாதிரி நல்லா தூங்கிவிடுவேன்.

முதலில் உங்க காரியம் நடக்கணும் என்பதற்காக, சமையல் பண்ணும் போது நான் அழிச்சாட்டியம் பண்ணக்கூடாது என்பதற்காக,  மிஸ்டர் பீன் போட்டு விடறீங்களே, மிஸ்டர் பீன் கதாபாத்திரம் அறிவாளியா? உலகமகாக் கோமாளியான மிஸ்டர் பீன் பேசுவதைக் கண்டால் நான் கோமாளி ஆகாமல் என்ன செய்வேன்..? 

என் அம்மா பெருமை அடித்துக் கொள்வாள். ‘என் குழந்தைக்குச் சின்ன வயது முதலே டிஸ்கவரி சேனல்தான் காட்டுகிறேன்’ என்று!
குட்டி மானுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே, நான்கு சிறுத்தைப் புலிகள் விரட்டி, குட்டியின் கண் எதிரிலே தாய் மானைப் பீஸ்பீசாகக் கிழிக்கிறதே, சிறுவன் எனக்கு என்ன தோன்றும்? பசித்தால்… யாரை வேண்டுமானாலும் கொல்லலாம்! டிஸ்கவரி சேனல் முழுவதும் ஒன்றை ஒன்று துரத்திச் சாப்பிடுவதுதானே நடக்கிறது!

அந்த அம்மா, ‘எங்க வீட்ல அப்படி இல்லீங்க, அவர் ஆஃபீஸ் போயிடுவார். நானும் ஆஃபீஸ் கிளம்பிடுவேன். ரெண்டு வயசிலயே என் புள்ளைய க்ரீச்சில விட்டுவிடுவோம். சமத்து தெரியுமோ’  

என்ன வெங்காய சமத்து... யாரோ பெற்ற பிள்ளையை, யாரோ ஒரு ஆயா  மொத்து, மொத்து என்று மொத்துவாள். இரண்டு வயதில் செஸ் விளையாடக் கற்றுக் கொடுப்பார்கள். 
வீட்டில் தவழ்ந்து அம்மாவின் மொழியைக் கேட்டு, அம்மாவை நினைக்கும் போது எல்லாம், அணைத்துக் கொண்டு, அடிப்பது போல் அடிக்கும் அம்மாவின் அன்பை சுவைத்துக் கொண்டு, சின்னச்சின்ன விஷயங்களை அறிந்து கொள்வது போல், என் இளம் பருவத்தில் க்ரீச்சில் என்ன கற்றுக் கொள்ள முடியும்?
    ஒன்று தெரியுமா பெற்றோர்களே... அம்மாவின் அடி வலிப்பதே இல்லை! அப்பாவின் அடி மறப்பதே இல்லை!! 

விளக்கில் கை வைக்கும் போது, கன்னா பின்னாவென்று திட்டிக் கொண்டு,  கையால் அடிப்பது போல் நடிப்பாள் அம்மா!  
    நாலு அடி அடிச்சிட்டு கன்னா பின்னாவென்று திட்டுவார் அப்பா!  
    அம்மா நிறையத் திட்டி... லேசான அடியும், அப்பா நிறைய அடித்து  நிறையத் திட்டியும் இருப்பதால்...‘விளக்கின் அருகே கையைக் கொண்டு போகக் கூடாது’  என்ற பாடம் எனக்குக் கிடைக்கும்!! 
    க்ரீச்சில் இது, ‘பேட் டச்’  ‘குட் டச்’   என்று நுனிநாக்கில், ஆங்கிலத்தில் பேசுவார் ஒரு க்ரீச்சுக்காரி.  
    என் தாயின் மொழியில் கற்காமல் அந்நிய மொழி எனக்கு என்ன கற்றுத் தந்து விட முடியும்..?

இரவு ஏழு மணிக்கு தூக்கிக் கொண்டு வருவார்கள். அம்மா ஒரு நாலு முத்தம். கிச்சனுக்குள் போய் விடுவாள். அப்பா ரெண்டு முத்தம், சிக்கனுக்குள் போய் விடுவார்.
பின் அப்பா, பைல்களிலோ, லேப்டாப்புகளிலோ, ஆன்ட்ராய்டு ஃபோனிலோ மூழ்கி இருப்பார். அம்மா சீரியலுக்குள் மூழ்கி விடுவார். நான் மாங்கு மாங்குன்னு முழித்துக் கொண்டிருப்பேன். நான் பள்ளிப் பருவத்தைத் தொடும்போது… எனக்குள் வன்மம் வளர்ந்து விடுகிறது!
இப்போது எல்லாம் திருமணமான உடனேயே பிறப்பது ஆணா, பெண்ணா என்று கூடத் தெரியாமல், தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் பெற்றோர்கள் வரிசையில் நின்று விடுகிறார்கள்!

மூச்சைத் தொலைத்து, பணத்தைத் தொலைத்து, நிம்மதியைத் தொலைத்து சீட்டு வாங்கும் போதே, குழந்தையான எனக்கு… பெரும் சுமை வந்து விடுகிறது! ‘எவ்வளவு கஷ்டப்பட்டு சீட்டு வாங்கியிருக்கேன் ராஸ்கல்’ இது என் அப்பா. ‘உன்னை யாருப்பா கஷ்டப்பட்டு அங்கபோய் சீட்டு வாங்கச் சொன்னது?’ தெரு முனையில் சீண்டுவார் இல்லாமல் ஒரு அரசுப் பள்ளிக்கூடம் இருக்கிறது என்றால்… அரசுப்பள்ளிக்கூட ஆசிரியர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளின் கல்விக்காக, ஏதோ ஒரு தனியார் பள்ளியின் வாசலில் தவம் கிடப்பார்கள். தன் பள்ளி மீது நம்பிக்கை இல்லாத அந்த ஆசிரியர் அப்பா!!
அப்படியே நான் அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தாலும், கழிப்பிடம் இருக்காது! சுகாதாரக் குடிநீர் இருக்காது!

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் ஒரு கட்டிடம்! மரத்தடி வகுப்புகள், நல்லதும் கெட்டதுமாக கலந்து வரும் குழந்தைகள். என் அப்பா நினைத்ததைப் போல், அங்கு எனக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை.

ஏங்க மூணு, நாலு வயசுக் குழந்தையான எனக்குத் தேவைதானா… நான் எப்படிங்க நல்லவனா வளருவேன்..? எனக்கு எப்படிங்க பண்பு இருக்கும்?

நீச்சல்… தேவைதான் ஆபத்துக்கு உதவும். அது கட்டாயக்கல்வி! சதுரங்க விளையாட்டு… கட்டாயக்கல்வி! ஓவியம்… கட்டாயக்கல்வி! நடனமும், பாட்டும் கூட கட்டாயக் கல்வி! இது… நான் தெருவில் விளையாடும் போது கிடைக்க வேண்டியவை!
சாயங்காலம் நாலு மணியானா, மூன்று நான்கு குழந்தைகள் சேர்ந்து, ஒருத்தர் சட்டையை ஒருத்தர் பிடித்து ரயில் விளையாட்டு விளையாடுவது, திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடுவோம், ஒளிந்து விளையாடுவோம், ஒளித்து வைத்து விளையாடுவோம், எங்கே தொலைத்தோம்?பக்கத்து வீட்டில் இருக்கும் குழந்தைகள் எதுன்னு எங்களுக்குத் தெரிய மாட்டேங்குது!

எங்கப்பா யாரிடமோ போனில் பேசுவார். ‘மாம்ஸ் செவ்வாய்க் கிரகத்தில மனுஷன் இருக்கானாம்ய்யா.’ ஏண்டா தகப்பா… மேல் வீட்டில மனுஷன் இருக்கான், அதைப் பார்க்காம செவ்வாய்க் கிரகத்தில மனுஷன் இருக்கானான்னு பார்க்கறே..?
எங்கள ஏன் இப்படி வளர்க்கிறீங்கன்னு கேட்டா… ‘ராயலா வளர்க்கறாங்களாம்!’ ஏங்க, எங்கப்பன் கண்ணாடி மாட்டியிருப்பார் சோடாபுட்டிக் கண்ணாடி! எங்கம்மாவும் கண்ணாடி மாட்டியிருப்பாங்க! சின்ன வயசில எனக்கும் கண்ணாடியைப் போட்டு விட்டுருவாங்க.

ஒரு இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு முன்னால் வயதானவர்கள் மட்டுமே அணிந்த கண்ணாடி, இன்று… பிறந்து வெளியே வரும் குழந்தைகளுக்கு மட்டும்தான் கண்ணாடி இல்லை! எங்கம்மா முன்னூற்றி ஐம்பது வருடங்கள் அழகியாகவே இருக்கப் போறாங்களாம்! எனக்குத் தாய்ப்பால் கொடுத்தால்… ஒரு வருடம் குறைந்து விடுமாம்!! கண்ட கண்ட கருமத்தை எல்லாம் கரைத்துக் கரைத்து என் வாயில் ஊற்றுவார்கள். அதை விட ஒரு பாட்டில் மது வாங்கி வாயில் ஊற்றினால் போதையில் உறங்கி விடுவேன்!
முன்பு எல்லாம் குழையக் குழையச் சோறு வைத்து, வாய் முகமெல்லாம் ஆகிறமாதிரி இடுப்பில் தூக்கி வைத்து ஏமாற்றி ஏமாற்றி வயிறு நிறைய ஊட்டுவார்களே… உங்க அம்மா மட்டும் உங்கள அப்படி வளர்த்தா! எனக்கு மட்டும் ஏம்மா… டின்னுல விதவிதமா..?
விவரம் தெரிந்த என்னைப் போல குழந்தைகள் முதல் உண்ணும் உணவே, மேகியாகவோ, நூடுல்ஸாகவோ, ஃப்ரைட்ரைஸ் ஆகவோ இருக்கிறது.

ஆனா, எட்டுவயசில ‘மூதேவி காய்கறியைத் தொடமாட்டேங்குது பாரேன், கீரை என் புள்ளைக்கு தொண்டையில் இறங்காது’ என்பாள் அம்மா!
கெமிக்கல் கலந்த நூடுல்ஸ்களையும், கெமிக்கல் கலந்த குளிர்பானங்களும் என் நாவின் சுவை மொட்டுக்களில் ஊறிய போது, அந்த நா, கீரையையும், காய்கறியையும் எப்படி ஏற்றுக் கொள்ளும்.?
தூக்கிட்டுப் போ, நாள் பூரா காத்துக்கிட நாசன் வாசல்ல! ரூம் ரூமா அலைய வைப்பான். ஃபிலிம் காட்டறது. ஒரு சொட்டு மருந்து ஊத்திட்டு, மூன்று மணி நேரம் உட்கார வைத்து விட்டு, அடுத்த ரூமுக்கு வரச் சொல்லித் துடைச்சு விடுவாங்கய்யா!
‘பாப்பா கண்ணை அசைக்கக் கூடாது!’ என்பான்.

டப்பாவுல போட்டா கொடுக்க முடியும், அந்தப் பக்கம் ஒரு அசைவு, இந்தப் பக்கம் ஒரு அசைவு, ஒரே இடத்தில நிக்கனும்ன்னா செத்துப் போனாத்தான் அப்படியே நிக்கும்!
என்ன குறைபாடுன்னு தெரிஞ்சு திருவாய் மலர சாயங்காலம் நாலே முக்கால்!
அப்புறம் ஒன்றே முக்கால் மணிநேரம் அரிய பரிசோதனைகள் எல்லாம் நடக்கும். 5.55க்கு ரிசல்ட் வரும். ஏன்னா… டாக்டர் வீட்டுக்குப் போகனுமல்ல!

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவனாவதும், கெட்டவனாவதும் ஆயா வளர்ப்பினிலே… வேறு என்ன சொல்ல முடியும்?…

  • அடுத்தடுத்த அத்தியாயம் தொடரும்…

Privacy & Policy
Disclaimer
Contact us
About us