குணமடைந்தார் அஜிதா – “சாவிலிருந்து மீண்டு வந்து விஜய்யை முதலமைச்சர் ஆக்குவேன்” என சபதம்.!
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யை முதலமைச்சராக அரியணையில் அமர்த்த பலமடங்கு அதிக வேகத்தில் களப்பணியாற்றுவேன் என, தவெகவை சேர்ந்த பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் உறுதி தெரிவித்துள்ளார். சமீபத்தில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அஜிதா ஆக்னல், தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படாததால், தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள பனையூர் அலுவலகம் முன்பாக தவெக தலைவர் விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, விஜய் நேரில் சந்தித்து பேசவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழ்நிலையில், கடந்த 25ஆம் தேதி அஜிதா ஆக்னல் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தவெகவினரிடமிருந்து எழுந்த விமர்சனங்களால் மனம் உடைந்தே இந்த முடிவை எடுத்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அஜிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். பின்னர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து மீண்டும் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு, மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை தேறி, முழுமையாக குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அஜிதா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடைபெற்ற காலத்தில், தவெக தலைவர் விஜய் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக மலேசியா சென்றது அரசியல் ரீதியாக சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அஜிதாவின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து தவெக வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், அஜிதா ஆக்னல் தனது எக்ஸ் (Twitter) சமூக வலைதளப் பதிவில்,
“கழகத் தோழர்கள் என் மீது கொண்ட பேரன்பினாலும், அவர்களின் பிரார்த்தனைகளாலும் மட்டுமே நான் பூரண குணமடைந்துள்ளேன். 2026-ல் தளபதியாரை முதலமைச்சராக அரியணையில் ஏற்ற பலமடங்கு அதிக வேகத்தில் களப்பணியாற்ற உறுதி கொண்டுள்ளேன். வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், தவெக தலைவர் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளையும் அவர் டேக் செய்துள்ளார். இந்த அறிவிப்பு தவெக ஆதரவாளர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
