தரம் குறைந்த இடியாப்பம் புகார் எதிரொலி: உரிமம் இன்றி விற்பனை செய்ய தடை.!

தமிழகத்தில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வீடு வீடாகச் சென்று இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் இனி கட்டாயமாக உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற வேண்டும் என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சமீப காலமாக மாநிலத்தின் பல பகுதிகளில் தரம் குறைந்த இடியாப்பங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக காலை நேரங்களில் சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் விற்பனை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சுகாதார விதிகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில இடங்களில் சுத்தமற்ற சூழலில் தயாரிக்கப்பட்ட இடியாப்பங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், இதனால் உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் அனைத்து நடமாடும் இடியாப்ப விற்பனையாளர்களும் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய உத்தரவின் படி, இடியாப்பம் விற்பனை செய்யும் போது விற்பனையாளர்கள் கட்டாயமாக கையுறைகள் மற்றும் தலையுறைகள் அணிய வேண்டும். மேலும், இடியாப்பம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதுடன், தயாரிக்கும் இடம் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு கையாளும் முறைகளில் சுகாதார விதிகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்பதையும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சிறு வணிகர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, உரிமம் பெறும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் FoSCoS (Food Safety Compliance System) இணையதளம் அல்லது இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் இலவசமாக உரிமம் பெறலாம். இந்த உரிமம் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன், அதற்கும் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், உரிமம் இல்லாமல் இடியாப்பம் விற்பனை செய்வோர் மற்றும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பான, தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எனவும், விற்பனையாளர்கள் அனைவரும் அரசின் உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.