நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார்; பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து அஞ்சலி.!

கொச்சியில் நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார். வயது 90 ஆக இருந்த இவர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று எளமக்கரையில் உள்ள வீட்டில் உயிரிழந்தார். அவரது மறைவு மலையாள சினிமா ரசிகர்களும், பிரபலங்களும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மோகன்லால், படங்களில் பிஸியாக இருந்தாலும், தனது தாயாருடன் நெருங்கிய உறவைக் காத்து வந்தார். பரபரப்பான வேலைகளுக்கு மத்தியிலும் தாயாருக்காக நேரம் ஒதுக்கி, அவரை கவனித்துள்ளார். “என் வாழ்க்கையில் இந்த இடத்திற்கு நான் வருவதற்கு காரணம் என் தாய் சாந்தகுமாரி” என்று மோகன்லால் பலமுறை மேடையில் கூறி, தாயரை பெருமைப்படுத்தியுள்ளார். அண்மையில் தாதாசாகேப் பால்கே விருதை பெற்றபோது, முதலில் சந்தித்தது தாயாரே என்று தெரிவித்தார்.

சாந்தகுமாரியின் கணவர் விஸ்வநாதன் நாயர் முன்பே காலமானவர்; அவர்களின் மூத்த மகன் பியாரிலால் 2000ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் மோகன்லாலுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கொச்சியில் தாயாரின் உடல் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதி சடங்கு நாளை பிற்பகலில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சகோதரர் மோகன்லால், நீங்கள் நீங்களே தேற்றிக்கொள்ள முடியும். நண்பர்கள் எப்போதும் உங்களுக்குத் துணையாக இருப்பார்கள். இது போன்ற இழப்பை எந்த ஆறுதலாலும் ஈடுசெய்ய முடியாது. கவனமாக இருங்கள், நாங்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.