‘யார் பெற்ற மகனோ’ பாடலால் கண்ணீர் கடல் – விஜய்யை நினைத்து உருகிய அனிருத், கலங்கிய 80 ஆயிரம் ரசிகர்கள்
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற புக்கீட் ஜலீல் மைதானத்தில் நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு விழாவை வரலாற்றுச் சிறப்பாக மாற்றினர்.
இசை வெளியீட்டு விழாவின் முக்கிய நாயகனாக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் திகழ்ந்தார். விஜய் நடித்த பல திரைப்படங்களில் இருந்து ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய அனிருத், தனது உருக்கமான பேச்சால் ஒட்டுமொத்த அரங்கையும் உணர்ச்சியில் மூழ்கடித்தார்.
விழாவில் பேசிய அனிருத், “எனக்கு 21 வயது இருந்தபோது கத்தி படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை விஜய் அண்ணா எனக்கு கொடுத்தார். அப்போது நான் வெறும் இரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருந்தேன். இவ்வளவு பெரிய நடிகர் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்தது என் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம்” என்று கூறினார்.
மேலும், “அந்த நம்பிக்கையிலிருந்து இன்று வரை பல படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். அவற்றில் பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. ஜனநாயகன் படம் விஜய் அண்ணாவின் கடைசி படம் என்ற எண்ணமே எனக்கு மிகப்பெரிய அழுத்தமாக இருந்தது” என உணர்ச்சிவசமாக தெரிவித்தார்.
‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியானதும் ரசிகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு தன்னை நிம்மதியடைய செய்ததாக கூறிய அனிருத், அந்த பாடலை வெற்றிப்பாடலாக்கிய ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.
பின்னர், “ஜனநாயகன் தான் அண்ணாவின் கடைசி படம் என்று நினைக்கும் போது ரொம்பவே வருத்தமாக இருக்கு… நான் உண்மையிலேயே உங்களை மிஸ் பண்ணுவேன் அண்ணா” என்று கூறியபடி, கத்தி படத்தின் கிளைமாக்ஸ் பாடலான ‘யார் பெற்ற மகனோ’ பாடலை பாடினார்.
அந்த பாடல் ஒலிக்கத் தொடங்கியவுடன், ஒட்டுமொத்த அரங்கமும் கண்ணீரில் மூழ்கியது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் மேடையில் இருந்த பலரும் உணர்ச்சிவசப்பட்ட தருணம், இந்த இசை வெளியீட்டு விழாவை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியது.
