47 ஆண்டுகள் கடந்தும் சலிக்காத சினிமா காதல் – ‘பவுனுத்தாய்’யாக மிரள வைக்கும் ராதிகா சரத்குமார்.!
தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி ஏறக்குறைய 47 ஆண்டுகள் கடந்தும், சினிமா இன்னும் தனக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லை என்று உறுதியுடன் சொல்கிறார் நடிகை ராதிகா சரத்குமார். தனது நீண்ட திரைப்பயணம் பெரும் அனுபவங்களால் நிரம்பியது என்றும், அந்த அனுபவங்களை வார்த்தைகளால் முழுமையாக விவரிக்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
இந்த அனுபவமும் நடிப்புத் திறமையும் தான், நடிகர் சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரிக்கும் ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகாவை கதாநாயகியாக தேர்வு செய்யக் காரணம். இந்தப் படத்தில், 75 வயதான பவுனுத்தாய் என்ற கதாபாத்திரத்தில் ராதிகா தோன்றுகிறார். அவரது தோற்றமும் நடிப்பும் ரசிகர்களை மிரள வைக்கும் வகையில் இருக்கும் என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.
விகடன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ராதிகா,
“இந்த சினிமா உலகில் நான் அறிந்தது கொஞ்சம். அதிலும் நினைவில் சேமித்தது இன்னும் கொஞ்சம். உண்மையில், நான் இப்போது நடித்து வரும் ‘தாய் கிழவி’ எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்த படம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
75 வயது கிழவி வேடம் என்றதும், ஆரம்பத்தில் சற்று தயக்கம் ஏற்பட்டதாகவும், உடல்ரீதியாகவும் மனதளவிலும் அது கடினமாக இருக்கும் என நினைத்து, முதலில் நடிக்க முடியாது என்று கூறியதாகவும் ராதிகா பகிர்ந்துள்ளார். ஆனால் இந்தக் கதையை நடிகர் சரத்குமார் கேட்டபோது,
“அருமையான கதையை ஏன் மறுக்க வேண்டும்? கிராமத்தையும் அங்குள்ள மக்களையும் அழகான வாழ்வியலுடன் கண்முன்னே கொண்டு வரும் கதையில் ஏன் நடிக்கக் கூடாது?” என்று அவர் கேட்டதாகவும், அதன் பிறகே நடிக்க முன்வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கதையை கேட்டபோது, நடிகர் கமல்ஹாசனின் நினைவு வந்ததாக கூறும் ராதிகா,
“கமல் போல நாமும் வித்தியாசமான முயற்சியில் ஈடுபடக்கூடாதா என்று தோன்றியது. நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் மட்டுமே தெரிய வேண்டும். ராதிகா தெரியக் கூடாது என்பதே என் எண்ணம்,” என்கிறார். இதுகுறித்து கமல்ஹாசனை தொடர்புகொண்டு பேசியபோது, “கொஞ்சம் கடினமாக இருக்கும், பார்த்து செய்ய வேண்டும்” என்று அவர் அறிவுரை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஒப்பனைப் பொறுப்பை கேரளாவைச் சேர்ந்த வினிஷ் கவனித்துள்ளார். அவரது உதவியால் பவுனுத்தாய் கதாபாத்திரமாக முழுமையாக மாறியதாக கூறும் ராதிகா, அந்த தோற்றத்தைப் புகைப்படமாக எடுத்து கமல்ஹாசனுக்கு அனுப்பியபோது, கமல் பரவசமாகி விட்டதாக குழந்தையைப் போல் உற்சாகமாக பகிர்கிறார்.
மேலும்,
“வேறு எந்தக் கதாநாயகியும் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டதில்லை. நீ சாதித்துவிட்டாய்,” என்று கமல்ஹாசன் பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், ‘தாய் கிழவி’ படத்தின் முன்னோட்டத்தை கமல் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, முன்னாள் நடிகை ஸ்ரீபிரியாவையும் கைப்பேசியில் தொடர்புகொண்டு, “இதுபோன்ற நடிகை இனி பிறந்துதான் வரவேண்டும்” என்று கமல் பாராட்டியதாகவும் ராதிகா கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் பாராட்டால் மனமகிழ்ந்த ராதிகா, நடிகர் சிவகார்த்திகேயனையும் பாராட்டத் தவறவில்லை. சிவாவின் ஆரம்பகால பயணமும், கடும் முயற்சிக்குப் பிறகு அவர் அடைந்துள்ள உயரமும் தன்னை பிரமிக்க வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் தமிழ்த் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பதாகவும், நல்ல கதைகள் திரைப்படமாக வேண்டும் என்பதில் அவர் கொண்டுள்ள முனைப்பையும் ராதிகா பாராட்டியுள்ளார்.
“‘சம்பாதித்த பணத்தை ஏன் திரும்பத் திரும்ப சினிமாவிலேயே முதலீடு செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘அதுதானே நியாயம்’ என்று கமல் சொல்வார். அதேபோல், சிவாவும் தான் சம்பாதிப்பதை சினிமாவில் கணிசமாக முதலீடு செய்கிறார். அவரைப் போன்ற இளையர்கள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவது அபூர்வம்,” என்று ராதிகா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் சிவகார்த்திகேயனின் குழு செய்து கொடுத்ததாகவும்,
“இது பெரிய படம் அல்ல. ஆனாலும் படத்தின் தேவைக்கு மேல், மனம் கோணாமல் எங்களை மிக நன்றாக கவனித்தார். அவர் நல்ல படங்களை தயாரிக்கும் முனைப்பை எப்போதும் கைவிடக்கூடாது. அதுவே என் வேண்டுகோள்,” என்றும் ராதிகா மனமார கூறியுள்ளார்.
இந்தப் படத்தை இயக்குநர் சிவகுமார் இயக்கியுள்ளார். ராதிகாவை மனதில் வைத்துத்தான் இந்தக் கதையை எழுதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
