பாமகவுக்கு புதிய சவால்: காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தொடங்கிய ‘ஜெ குரு பாட்டாளி மக்கள் கட்சி’
சென்னை: பாமக கட்சியின் மூத்த தலைவராக செயல்பட்ட மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். ‘ஜெ குரு பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற பெயரில் அவர் தனது கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த புதிய கட்சியின் தொடக்க விழா வரும் ஜனவரி 9ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது.
பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த காடுவெட்டி குரு, மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும் செயல்பட்டவர். கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வந்த அவர், 2001ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியிலும், 2011ஆம் ஆண்டு ஜெயங்கொண்டம் தொகுதியிலும் போட்டியிட்டு பாமகவின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வன்னியர் சமூக அரசியலில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்த காடுவெட்டி குரு, 2018ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார்.
காடுவெட்டி குருவிற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் கனல் அரசன், மகள் விருதாம்பிகை. கடந்த சில ஆண்டுகளாகவே விருதாம்பிகை பாமக தலைமையையும் அதன் அரசியல் நிலைப்பாடுகளையும் விமர்சித்து வந்த நிலையில், தற்போது தனியாக புதிய கட்சியை தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை செய்தியாளர்களிடம் பேசிய விருதாம்பிகை,
“நாங்கள் புதிய கட்சியை தொடங்கியுள்ளோம். இதன் பெயர் ‘ஜெ குரு பாட்டாளி மக்கள் கட்சி’. இந்த கட்சியை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளோம். கட்சியின் தொடக்க விழாவை ஜனவரி 9ஆம் தேதி சேலத்தில் நடத்த உள்ளோம்,” என தெரிவித்தார்.
மேலும் அவர், தனது கட்சியின் முக்கிய கொள்கையாக சமூகநீதி இருக்கும் எனக் கூறினார். “அனைத்து சமூக மக்களுக்கும் சமமான, நேர்மையான சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதே இந்த கட்சியின் அடிப்படை நோக்கம். சமூகநீதியை மையமாகக் கொண்டுதான் வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்டது. அந்த கொள்கையில் எங்கள் அப்பா காடுவெட்டி குரு கடைசி வரை உறுதியாக இருந்தார்,” என்று கூறினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து கடுமையாக விமர்சித்த விருதாம்பிகை,
“ராமதாஸ் சமூகநீதிக்காக பல ஆண்டுகள் பாடுபட்டார். ஆனால் தனது மகன் அன்புமணி ராமதாஸ் மீதான பாசத்தினால் அந்த கொள்கையிலிருந்து அவர் விலகிவிட்டார். எங்கள் அப்பா அந்தக் கட்சிக்காகவும், வன்னியர் சமூகத்திற்காகவும் கடைசி வரை உண்மையாக இருந்தார். எந்த ஒரு மகனுக்காக ஒரு சமுதாயத்தை பின்தங்கிய நிலைக்கு கொண்டு சென்றாரோ, அந்த மகனே இன்று தந்தைக்கு எதிராக நிற்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் வேதனையாக இருக்கிறது,” என்று தெரிவித்தார்.
மேலும் அவர்,
“எங்களுக்குள் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ராமதாஸை விமர்சிக்கலாம். ஆனால் கட்சிக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு தந்தையை இழிவாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இன்று அனைத்து கட்சிகளும் வன்னியர்களுக்கு எதிரானதாகவே செயல்படுகின்றன. பாமக ஒரு காலத்தில் தமிழ்நாடு கட்சியாக இருந்தது. ஆனால் இப்போது அது தந்தை – மகன் கட்சியாக மாறிவிட்டது,” என கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
விருதாம்பிகையின் இந்த அறிவிப்பு, வன்னியர் அரசியலில் புதிய மாற்றங்களை உருவாக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். பாமகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் இந்த புதிய கட்சி எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, வரும் காலங்களில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
