பிக் பாஸ் 9 ‘கார் டாஸ்க்’ சர்ச்சை: “ஆபாசம், வன்முறையை டிஆர்பிக்காக காட்டாதீர்கள்” – மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் கடும் கண்டனம்.!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் சமீபத்தில் நடைபெற்ற ‘கார் டாஸ்க்’ தொடர்பான சர்ச்சைகள் மற்றும் போட்டியாளர்களின் நடத்தை குறித்து, மூத்த குற்றவியல் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆர்.எஸ். தமிழ்வேந்தன் கடுமையாக விமர்சித்துள்ளார். கஞ்சா, மது போன்ற பழக்கங்களால் ஏற்கனவே சீரழிந்து வரும் இளைஞர்களை, இத்தகைய ஆபாச மற்றும் வன்முறை காட்சிகள் மூலம் மேலும் தவறான பாதைக்கு தள்ளக்கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார்.

King 24×7 என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழ்வேந்தன், “கார் டாஸ்க் பார்ப்பதற்கே பதற்றமாக இருந்தது. பார்வதியின் குரல் எம்.ஆர். ராதா பெண் குரலில் பேசுவது போல உள்ளது. பீச்சில் ஆணுறை எடுத்து காட்டி, ‘இது என்ன தெரியுமா?’ என்று ஆண்களிடம் கேட்பதை ஒரு நிகழ்ச்சியாக மாற்றியவர்கள் இன்று பெரிய வாழ்க்கை முறையை காட்டுகிறார்கள்” என்று விமர்சித்தார்.

சான்ட்ரா கீழே தள்ளப்பட்டு வலிப்பு ஏற்பட்ட சம்பவம் குறித்து பேசிய அவர், “ஒரு கார் விபத்து நடந்தால் கூட உடனே ஓடிப் போய் உதவுவோம். ஆனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் சான்ட்ராவை தூக்காமல், ‘தப்பு, தப்பு’ என்று கத்திக்கொண்டிருந்தார்கள். இது மனிதநேயமற்ற செயல். சான்ட்ரா கீழே விழுந்தவுடன் தண்ணீர் தெளிக்கிறார்கள். அவர் போதையில் விழுந்து கிடக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

கமருதீன் குறித்து பேசிய தமிழ்வேந்தன், “கமருதீன் என்பது ஒரு இஸ்லாமியப் பெயர். இத்தகைய ஆபாசமான, வன்முறையான செயல்கள் அந்த மார்க்கத்தின்படி ‘ஹராம்’. இதற்கு முன் பிக் பாஸ் போட்டியாளரான மும்தாஜ் இன்று தன் தவறை உணர்ந்து மத நெறிகளுடன் வாழ்கிறார். ஆனால் கமருதீன் போன்றவர்கள் இன்னும் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள்” என்றார். மேலும், மடியில் உட்காருவது போன்ற செயல்கள் காதல் அல்ல என்றும் அவர் சாடினார்.

நாட்டில் விவசாய பிரச்சனைகள், டீசல் விலை உயர்வு, மழை சேதம், தேர்தல், மத்திய அரசின் நிதி வெட்டுகள் போன்ற பல முக்கிய பிரச்சனைகள் இருக்கும் போது, இளைஞர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மூழ்கிக்கிடப்பது வேதனையளிப்பதாகவும் அவர் கூறினார். தனிமனிதர்களின் அந்தரங்கம் மற்றும் ஆபாசம் ரசிக்கக்கூடிய பொருளாக மாற்றப்படுவது, வளரும் சிறுவர்களுக்கு தவறான முன்மாதிரியாக அமையும் என்றும் எச்சரித்தார்.

சட்ட ரீதியாகவும் அவர் கடும் கருத்துகளை முன்வைத்தார். “ஒரு விபத்து அல்லது காயம் ஏற்பட்டால் புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இல்லை. காவல்துறையே தானாக முன்வந்து (Suo Motu) வழக்குப் பதிவு செய்யலாம். அந்த வகையில் விஜே பார்வதி, கமருதீன் மற்றும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இது ஒரு விளையாட்டு என்று சொன்னாலும், ஒருவேளை உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு?” என்று கேள்வி எழுப்பினார்.

இறுதியாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை நோக்கி, “இந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் லாபத்தில் ஏழை மக்களுக்கு வீடு கட்டப் போகிறீர்களா? வெறும் பணத்திற்காக ஒரு குடும்பத்தையும், ஒரு சமூகத்தையும் கெடுப்பது நியாயமா? ‘பிடிக்காவிட்டால் சேனல் மாற்றுங்கள்’ என்பதே தீர்வு அல்ல. பிக் பாஸ் வீட்டிற்குப் பதிலாக, போட்டியாளர்களை வயலில் இறக்கி விவசாயம் செய்யச் சொன்னால் அது சமூகத்திற்கு பயனுள்ள முன்மாதிரியாக இருக்கும்” என்று கடுமையாக விமர்சித்தார்.