பிக் பாஸ் 9: வெளியே திட்டியவர்கள் மீண்டும் உள்ளே? வைல்ட் கார்டு கம்பேக் டிராமாவால் கொதிக்கும் ரசிகர்கள்.!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. ஃபைனல் நெருங்கும் நிலையில், வீட்டுக்குள் நடைபெறும் விளையாட்டை விட, வெளியே சென்று மீண்டும் வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளர்களின் வைல்ட் கார்டு கம்பேக் தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகிறது.

இந்த சீசனில் ஏற்கனவே எலிமினேட் ஆன சில போட்டியாளர்கள், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும், இந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும், தங்களுடைய வெளியேற்றம் அநியாயமானது, முழு ஷோவும் ஸ்கிரிப்ட் என கடுமையாக விமர்சித்து பேசியிருந்தனர். இதனால் பிக் பாஸ் மீது ரசிகர்களிடையே சர்ச்சை எழுந்தது.

ஆனால் இப்போது, அதே போட்டியாளர்களையே மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது விஜய் டிவி. இதை பார்த்த ரசிகர்கள், “இது டிஆர்பிக்கான திட்டமா?”, “எவ்வளவு திட்டினாலும் பரவாயில்லை, ஷோவுக்கு தேவையென்றால் மீண்டும் கூப்பிடுவோம் என்ற மனநிலையா?” என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முதல் வாரத்திலேயே வெளியேறிய பிரவீன் காந்தி, பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று வெளியே நடந்த விவாத நிகழ்ச்சிகளில் பேசியது இன்னும் ரசிகர்களின் நினைவில் உள்ளது. அதேபோல், தங்களுடைய வெளியேற்றம் அநியாயம் என்று வெளிப்படையாக பேசிய தர்பூசணி திவாகர், வியன்னா போன்றவர்களும் இப்போது மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதைக் கண்ட ரசிகர்கள், “அப்போ அந்த கோபம் எல்லாம் வெளியே காட்டின ட்ரெய்லரா?” என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

வெளியே சென்ற பிறகு, வீட்டுக்குள் நடக்கும் விளையாட்டு, யாருக்கு ரசிகர் ஆதரவு இருக்கிறது, யார் ஹீரோ, யார் வில்லன் என்பதையெல்லாம் புரிந்துகொண்ட பிறகே இந்த போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்திருக்கிறார்கள் என்றே பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதனால் தான், வீட்டிற்குள் நுழைந்த உடனே திடீர் தைரியம், அதிக பேச்சு, “நான் தான் வெளியில் ஹீரோ” என்ற எண்ணம் போன்றவை சிலரிடம் வெளிப்படுவதாக விமர்சனங்கள் எழுகின்றன.

ஏற்கனவே தற்பெருமை பேசுவதில் பெயர் எடுத்த திவாகர், வெளியே போய் வந்த பிறகு, “எனக்கு வெளியில் பெரிய வரவேற்பு கிடைத்தது, ரசிகர்கள் ஆதரவு இருந்தது” என்று அடிக்கடி கூறி வருகிறார். அதேபோல், திவாகர், பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோருக்கு ரெட் கார்டு கொடுத்தது தவறான விஷயம் என்றும் அவர் குரல் கொடுத்தார். ஆனால், அடுத்த நாளே அவரை மீண்டும் வீட்டுக்குள் அனுப்பியிருப்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.

மற்றொரு பக்கம், வியன்னா, தன்னை மட்டும் குறிவைத்து வெளியேற்றியதாக கூறி, சான்ட்ரா மற்றும் விக்கல் விக்ரம் மீது தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இது சிலருக்கு எரிச்சலாக இருந்தாலும், “நாங்க நினைச்சதையே நீங்க சொல்லிட்டீங்க” என்று வியன்னாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்களும் இருக்கின்றனர்.

பிக் பாஸ் 9 முழுமையாக முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், பழைய போட்டியாளர்கள், பழைய பிரச்சனைகள், பழைய சண்டைகள் என அனைத்தையும் மீண்டும் கிளப்பி, ஃபைனலுக்கு முன் டிஆர்பியை உயர்த்த விஜய் டிவி திட்டமிட்டு செயல்படுகிறது என்ற கருத்து தற்போது ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.