உலகம் 2026-ல்… ஆனால் எத்தியோப்பியா இன்னும் 2018-ல்! – காரணம் என்ன? வியப்பூட்டும் காலண்டர் ரகசியம்.!
ஒட்டுமொத்த உலகமும் தற்போது 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பியா மட்டும் இன்னும் 2018 ஆம் ஆண்டிலேயே இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது காலப்பிழை அல்ல, மாறாக அந்த நாட்டில் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படும் தனித்துவமான காலண்டர் முறையால் ஏற்பட்ட வேறுபாடாகும். உலக நாடுகள் பெரும்பாலும் சர்வதேச கிரிகோரியன் நாட்காட்டியை பின்பற்றும் போது, எத்தியோப்பியா மட்டும் நூற்றாண்டுகள் பழமையான கெயஸ் (Geʽez) என்ற காலண்டரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
எத்தியோப்பியாவில் பின்பற்றப்படும் கெயஸ் காலண்டர் ஒரு சூரிய நாட்காட்டி ஆகும். இது பண்டைய எகிப்திய காப்டிக் நாட்காட்டியில் இருந்து உருவானதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காலண்டர் கிரிகோரியன் நாட்காட்டியைவிட சுமார் 7 முதல் 8 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது. இதன் காரணமாகவே உலகம் 2026-ல் இருக்கும் போது, எத்தியோப்பியா 2018-ல் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது.
இந்த கெயஸ் காலண்டரின் முக்கிய தனித்துவம் அதன் மாத அமைப்பில்தான் உள்ளது. உலகம் அறிந்த கிரிகோரியன் காலண்டரில் 12 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், எத்தியோப்பிய காலண்டரில் மொத்தம் 13 மாதங்கள் உள்ளன. இதில் முதல் 12 மாதங்கள் தலா 30 நாட்களைக் கொண்டவை. 13வது மாதம் “பாக்குமே” (Pagume) என அழைக்கப்படுகிறது. இந்த மாதம் சாதாரண ஆண்டுகளில் 5 நாட்களையும், லீப் ஆண்டுகளில் 6 நாட்களையும் கொண்டுள்ளது.
மேலும், எத்தியோப்பிய புத்தாண்டு ஜனவரி மாதத்தில் அல்ல, செப்டம்பர் மாதத்தில் தொடங்குகிறது. பொதுவாக செப்டம்பர் 11 அல்லது 12ஆம் தேதி அங்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக, உலக நாடுகள் 2025-ல் இருந்தபோதே எத்தியோப்பியா 2018-ஆம் ஆண்டுக்குள் நுழைந்துவிட்டது. உலகம் 2026-க்கு மாறியபோதும், எத்தியோப்பியா 2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தான் இருந்தது.
இந்த கால இடைவெளிக்கான முக்கிய காரணம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஆண்டை கணக்கிடும் முறையில் ஏற்பட்ட வேறுபாடாகும். கிரிகோரியன் காலண்டர் உருவாக்கப்பட்டபோது, துறவி டியோனிசியஸ் எக்ஸிகுஸ் கிறிஸ்துவின் பிறப்பை “ஆண்டு 1” என கணக்கிட்டார். ஆனால், எத்தியோப்பிய மற்றும் காப்டிக் தேவாலயங்கள் பழைய அலெக்ஸாண்ட்ரிய கிறிஸ்தவ கணக்கீடுகளை பின்பற்றி, கிறிஸ்துவின் பிறப்பை சில ஆண்டுகள் பின்பாகக் கணக்கிட்டுள்ளன. இதுவே இந்த 7 முதல் 8 ஆண்டுகள் இடைவெளிக்குக் காரணமாக அமைந்துள்ளது.
கெயஸ் காலண்டர் எத்தியோப்பியாவில் வெறும் கலாச்சார அடையாளமாக மட்டுமல்லாமல், அன்றாட நிர்வாகத்திலும் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. அங்கு நீதிமன்றங்கள், பள்ளிகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் சட்ட ஆவணங்கள் அனைத்திலும் எத்தியோப்பிய தேதிகளே அதிகாரப்பூர்வமாக இடம் பெறுகின்றன. சர்வதேச தொடர்புகளுக்காக மட்டுமே கிரிகோரியன் தேதிகள் துணையாக குறிப்பிடப்படுகின்றன.
எத்தியோப்பிய காலண்டரில் உள்ள மாதங்களும் தனித்துவமான பெயர்களைக் கொண்டவை. மெஸ்கரெம் என்ற மாதத்துடன் (செப்டம்பர் 11 – அக்டோபர் 10) தொடங்கி, டிகிம்ட், ஹிடார், தஹ்ஸாஸ், ஹாம்லே, நெஹாஸ் என மாதங்கள் தொடர்கின்றன. ஒவ்வொரு மாதமும் துல்லியமான 30 நாட்கள் கொண்டதாக இருப்பது இந்த காலண்டரின் மற்றொரு சிறப்பாகும்.
உலகமயமாக்கல் வேகமாக முன்னேறும் இந்த காலத்திலும், எத்தியோப்பியா தனது பாரம்பரிய காலண்டர் முறையை உறுதியாகக் காப்பாற்றி வருகிறது. “Time is different here” என்ற வாசகமே அந்த நாட்டின் சுற்றுலா விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகிறது. உலகம் 2026-ல் முன்னேறிக் கொண்டிருந்தாலும், எத்தியோப்பியா 2018-ல் இருப்பது பின்னடைவு அல்ல; அது அதன் வரலாறு, மதம் மற்றும் பண்பாட்டை மதித்து பாதுகாக்கும் ஒரு அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.உலகம் 2026-ல்… ஆனால் எத்தியோப்பியா இன்னும் 2018-ல்! – காரணம் என்ன? வியப்பூட்டும் காலண்டர் ரகசியம்
