“அப்பாவுடன் சண்டை போட்ட மாதிரி தான்” – இளையராஜாவுடன் ஏற்பட்ட மனவருத்தத்தை வெளிப்படையாக பகிர்ந்த மிஷ்கின்.!

இளையராஜாவை “அப்பா” என்றே அழைப்பார் இயக்குநர், நடிகர் என பல்வேறு முகங்களில் ரசிகர்களை கவர்ந்து வரும் மிஷ்கின், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் செயல்பட்டு வருகிறார். இசை மீது அளவற்ற காதல் கொண்டவரான மிஷ்கின், குறிப்பாக இசைஞானி இளையராஜா குறித்து பேசும் போது உணர்ச்சிவசப்படுவது பலமுறை பார்வையாளர்களால் கவனிக்கப்பட்டுள்ளது.

மிஷ்கின் எப்போதும் இளையராஜாவை “அப்பா” என்றே அழைப்பார். தனது படங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா என்றால், அவரது பெயரையே முதலில் இடம்பெறுமாறு போஸ்டர்களை வடிவமைப்பதும், மேடைகளில் அவரை இறைநிலைக்கு ஒப்பிட்டு பேசுவதும் மிஷ்கினின் வழக்கமான பண்பாகவே இருந்து வந்துள்ளது. இவ்வளவு ஆழமான மரியாதையும் அன்பும் கொண்ட இந்த உறவில், ஒருகட்டத்தில் பெரிய மனவருத்தம் ஏற்பட்டதாக மிஷ்கின் சமீபத்தில் வெளிப்படையாக கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சூப்பர் சிங்கர் மேடையில் இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனுடன் உரையாடியபோது, இளையராஜாவுடன் ஏற்பட்ட அந்த கருத்து வேறுபாடு குறித்து மிஷ்கின் மனம் திறந்து பேசினார். அப்போது அவர்,
“நான் இளையராஜா பற்றி அதிகமாக பேசுவதால் என்னை விமர்சிப்பதை பார்க்கிறேன். இப்போது உரிமையோடு ஒன்று சொல்கிறேன். இளையராஜா முகத்திலே கூட இனிமேல் முழிக்கக் கூடாது என்று சண்டை போட்டு வந்தவன் நான். அது நான் என் அப்பாவுடன் சண்டை போட்ட மாதிரி தான்” என்று கூறினார்.

இந்த வார்த்தைகள் மேடையில் இருந்தவர்களையும், நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களையும் நெகிழச் செய்தது. தொடர்ந்து பேசிய மிஷ்கின், இளையராஜா மீது தனக்கு இருக்கும் ஆன்மிகமான பற்று குறித்து உருக்கமாக விளக்கினார்.
“ஒரு இசைஞானிக்காக நான் என் வாழ்நாள் முழுக்க வேண்டிக் கொண்டே இருப்பேன். என் நாட்டில், என் வீட்டில், என் தாய் பெற்றெடுத்த அந்த மகா கலைஞன் – இறைவன் கொடுத்த அந்த பிச்சை எனக்கு மிகப்பெரிய பாக்கியம். அதனால்தான் நான் அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறேன். அவரைப் பற்றி பேசுவதால் என் ஆன்மா சுத்தமாகிறது” என உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

மிஷ்கினின் இந்த உருக்கமான பேச்சு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றது. குறிப்பாக, ‘தோழர் ஆதி’ என்ற எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பயனர்,
“இனி பார்க்கவே கூடாதுனு சண்டை போட்டு பிரிஞ்சு வந்த பிறகும், ஒருத்தரைப் பற்றி இவ்வளவு உள்ளப்பூர்வமாக, நெகிழ்ந்து, காதலோட பேச முடியுமா? அப்படியொரு கலைஞன் மிஷ்கின்… அது தான் ராஜா”
என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரின் பாராட்டுகளையும் ஆதரவையும் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, மிஷ்கின் – இளையராஜா உறவு என்பது சாதாரண தொழில்முறை தொடர்பு அல்ல; கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதற்கும் மேலான மரியாதை, இசை மீது கொண்ட ஆழ்ந்த பக்தி மற்றும் ஆன்மிக பிணைப்பு தான் என்பதைக் மீண்டும் உணர்த்துகிறது. ரசிகர்கள் மத்தியில், “உண்மையான கலைஞர்களுக்குள் சண்டை கூட ஒரு அன்பின் வடிவமே” என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.