“ஜாக்கிரதை” – சிவாஜி கணேசன் மனைவியிடம் தினமும் சொன்ன அந்த ஒரே வார்த்தை… வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்திய மௌனப் பாடம்.!

தமிழ் சினிமா வரலாற்றில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பவர் ஒரு நடிகராக மட்டுமல்ல, ஒழுக்கம், நேர்த்தி, மனிதநேயம் ஆகியவற்றின் அடையாளமாகவும் வாழ்ந்தவர். நாடக மேடைகளில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவாஜி, ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் தனது முதல் திரை தோற்றத்திலேயே தமிழ் சினிமாவின் பார்வையையே மாற்றினார். கருணாநிதி எழுதிய வசனங்களை தனது கணீர் குரலில் பேசி, நடிப்பு என்றால் என்ன என்பதற்கு புதிய வரையறை கொடுத்தார். அந்த முதல் படத்திலேயே, அவர் ஒரு சாதாரண நடிகர் அல்ல, ஒரு காலத்தை ஆளப்போகும் கலைஞன் என்பதைக் காட்டினார்.

சிவாஜி நடித்த கதாபாத்திரங்கள் மட்டுமல்ல, அவர் வாழ்ந்த வாழ்க்கையும் பல நடிகர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. இன்று முன்னணி நடிகர்கள் நேரம் தவறாமல் படப்பிடிப்புக்கு வருகிறார்கள் என்றால், அதற்கான விதையை விதைத்தவர் சிவாஜி தான். காலை 7 மணிக்கு ஷூட்டிங் என்றால், 6.45 மணிக்கே முழு மேக்கப்புடன் செட்டில் வந்து அமர்ந்திருப்பார். இந்த ஒழுக்கமும் கட்டுப்பாடும் தான், பின்னாளில் ரஜினிகாந்த், விஜய் போன்ற நடிகர்களால் பின்பற்றப்பட்டது. சிவாஜி நின்றால் ஒரு ஸ்டைல், நடந்தால் ஒரு ஸ்டைல், சிரித்தால் ஒரு ஸ்டைல் என அவர் வாழ்ந்ததே ஒரு சினிமா பேரரசன் போலத்தான்.

திரையில் ஒரு சக்கரவர்த்தியாக இருந்த சிவாஜி, வீட்டுக்குள் ஒரு எளிய கணவனாக இருந்தார். படப்பிடிப்புக்கு கிளம்பும் முன், டீ, சூப், ஜூஸ் என தனித்தனி ஃபிளாஸ்க்குகளில் அவரது மனைவி கமலா அம்மாள் தயார் செய்து வைப்பாராம். “டீ குடிங்க” என்று மனைவி சொல்லும் போது, சிவாஜி வாயால் பதில் சொல்லாமல், தொண்டையை லேசாகச் செருமி காட்டுவாராம். அது அவருக்கே உரிய மௌன பதிலாக இருந்தது. அந்த எளிய வீட்டுச் சூழலில் தான், அவர் ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்தார்.

ஆனால் இந்த எல்லாவற்றையும் விட, சிவாஜி தினமும் வீட்டை விட்டு கிளம்பும் போது செய்யும் ஒரு சிறிய செயல் தான், பின்னாளில் ஒரு பெரிய வாழ்க்கைப் பாடமாக மாறியது. காரில் ஏறி அமர்ந்த பிறகு, மனைவி கமலா அம்மாளை ஒருமுறை திரும்பிப் பார்த்து, “ஜாக்கிரதை” என்று சொல்லிவிட்டு தான் அவர் செல்வாராம். அந்த ஒரே வார்த்தையை அவர் தினமும் தவறாமல் சொல்லியிருக்கிறார். அப்போது அது ஒரு சாதாரண அக்கறை வார்த்தையாகவே தெரிந்திருக்கலாம். ஆனால் அதற்குள் ஒளிந்திருந்த அர்த்தம், காலம் கடந்த பிறகே புரிந்தது.

யாரும் நிரந்தரம் இல்லை என்பதுபோல், வயது அதிகரிக்க அதிகரிக்க சிவாஜியின் உடல்நிலை பாதிக்கத் தொடங்கியது. இறுதியில், தமிழ் சினிமா தனது மிகப்பெரிய கலைஞனை இழந்தது. சிவாஜி மறைந்த பிறகு, அவரது மனைவி கமலா அம்மாள் மனதளவில் முற்றிலும் உடைந்து போனார். அந்த துயர காலத்தில், இயக்குநர் பாரதிகண்ணன் ஒருமுறை சிவாஜி இல்லாத அந்த வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, சிவாஜியின் மறைவால் மிகுந்த வேதனையில் இருந்த கமலா அம்மாள், ஒரு உணர்ச்சி நிறைந்த நினைவைக் பகிர்ந்துள்ளார். “சிவாஜி தினமும் வீட்டை விட்டு கிளம்பும் போது ‘ஜாக்கிரதை’ன்னு சொல்லுவார். அப்போ அந்த வார்த்தையின் அர்த்தம் எனக்கு புரியல. இப்போ தான் புரியுது,” என்று கண்ணீருடன் கூறியுள்ளார். “அவருக்கு பிறகு மகன்களிடம் ஜாக்கிரதையாக இருக்கணும், பேரப்புள்ளைகளிடம் ஜாக்கிரதையாக இருக்கணும், வெளியில் நடக்கும்போது ஜாக்கிரதையாக இருக்கணும், முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட ஜாக்கிரதையாக இருக்கணும்… மொத்த வாழ்க்கையின் அர்த்தத்தையும் அந்த ஒரே வார்த்தையிலே எனக்கு சொல்லி வச்சுட்டு போயிட்டார்” என்று சொல்லி அழுதாராம்.

அந்த “ஜாக்கிரதை” என்ற ஒரே வார்த்தை, வெறும் எச்சரிக்கை அல்ல. அது வாழ்க்கையை கவனமாக வாழ வேண்டும் என்ற ஒரு தத்துவம். உறவுகளை பாதுகாக்க வேண்டும் என்ற அறிவுரை. மனிதர்களை புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்ற ஒரு வாழ்வியல் பாடம். திரையில் ஆயிரம் வசனங்களை பேசிய சிவாஜி, வாழ்க்கையில் தனது மனைவிக்கு சொன்ன அந்த ஒரு சிறிய வார்த்தையிலேயே, முழு வாழ்க்கையின் அர்த்தத்தையும் சொல்லிவிட்டார்.

சிவாஜி மறைந்த குறுகிய காலத்திலேயே, அவரது மனைவி கமலா அம்மாளும் இந்த உலகை விட்டு மறைந்தார். ஆனால் சிவாஜி விட்டுச் சென்ற அந்த ஒரு வார்த்தை, இன்றும் பலரின் மனதில் ஒலிக்கிறது. நடிகர் திலகம் என்ற பெயர், அவரது நடிப்பால் மட்டுமல்ல, அவர் வாழ்ந்து காட்டிய மனிதநேயமும் வாழ்க்கை ஞானமும் காரணமாக என்றும் நிலைத்திருக்கும்.