5 ஏக்கர் பங்களா, 500 ஏக்கர் தோப்பு… ஜமீன் வாழ்க்கையிலிருந்து சினிமா வரை – நடிகர் சத்யனின் ஆச்சரியமான பயணம்.!

தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும், தன்னுடைய அப்பாவித்தனமான முகபாவனையும் இயல்பான நடிப்பும் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் சத்யன். நடிகர் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் ‘சைலன்சர்’ என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்த விதம் இன்று வரை பலரால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. ஆனால் இன்று காமெடி நடிகராக அறியப்படும் சத்யன், உண்மையில் சினிமாவுக்குள் வந்த பாதை மிகவும் வித்தியாசமானதும், ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததுமானதாகும்.

சத்யன் தனது சினிமா வாழ்க்கையை நேரடியாக நகைச்சுவை நடிகராகத் தொடங்கவில்லை. சூர்யா நடித்த ‘காதலே நிம்மதி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான அவர், 2000 ஆம் ஆண்டு இளையராஜா இசையமைப்பில் வெளியான ‘இளையவன்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து ‘கண்ணா உன்னை தேடுகிறேன்’ என்ற படத்திலும் ஹீரோவாக நடித்தார். ஆனால், இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை அளிக்காததால், ஹீரோ வாய்ப்புகள் குறைந்து, மீண்டும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்கள் பக்கம் சத்யன் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. காலப்போக்கில் அவரது காமெடி நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சினிமாவில் சத்யனின் வாழ்க்கை மட்டுமல்ல, அவரது குடும்ப பின்னணியும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நடிகர் சத்யன் ஒரு காலத்தில் ஜமீந்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாதம்பட்டி என்ற ஊர் சமையலுக்கும் பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்ற இடமாகும். அந்த ஊரின் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் மாதம்பட்டி சிவக்குமார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு அதிபதியாக இருந்த அவர், ஏக்கர் கணக்கில் நிலங்களும், தோப்புகளும், கோவை – திருப்பூர் பகுதிகளில் பத்து பங்களாக்களும், சில பேருந்துகளும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த ஜமீன் குடும்பத்தின் ஒரே மகன் தான் நடிகர் சத்யன்.

சத்யன் பிறந்து வளர்ந்த பங்களா மட்டும் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்ததாகவும், இதைத் தவிர 500 ஏக்கருக்கு மேல் தோப்பு மற்றும் பிற சொத்துகள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரஜினிகாந்த் நடித்த ‘எஜமான்’ திரைப்படம் இந்த மாதம்பட்டி ஜமீன் குடும்பத்தின் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய செல்வாக்குடைய குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சத்யனின் வாழ்க்கை எப்போதும் சுகமானதாகவே இருந்ததில்லை.

மாதம்பட்டி சிவக்குமாருக்கு சினிமா மீது மிகுந்த ஈர்ப்பு இருந்தது. தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான மார்க்கண்டேயன் சிவகுமார் மற்றும் நடிகர் சத்யராஜ் ஆகியோர் இந்த குடும்பத்தின் உறவினர்கள். குறிப்பாக, நடிகர் சத்யராஜ் மாதம்பட்டி சிவக்குமாரின் அத்தை மகன் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டின் எதிர்ப்பை மீறி சினிமாவில் நடிக்க வந்த சத்யராஜுக்கு, ஆரம்ப காலங்களில் மாதம்பட்டி சிவக்குமார் மாத உதவித்தொகை அனுப்பி உதவியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் சினிமா தயாரிப்பிலும் இறங்கிய மாதம்பட்டி சிவக்குமார், சில திரைப்படங்களை தயாரித்தார். ஆனால், அந்த படங்கள் தோல்வியை சந்தித்ததால், குடும்பம் பெரும் நஷ்டத்தை சந்திக்கத் தொடங்கியது. அதே காலகட்டத்தில், தனது ஒரே மகன் சத்யனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் நோக்கில் ‘இளையவன்’ திரைப்படத்தை தயாரித்தார். அந்த படம் வெற்றி பெறாததால், நஷ்டம் மேலும் அதிகரித்தது. தொடர்ந்து வந்த தோல்விகளால், மாதம்பட்டி குடும்பம் தங்களுடைய சொத்துகளை ஒவ்வொன்றாக விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

காலப்போக்கில் மாதம்பட்டி சிவக்குமார் காலமானார். அதன் பிறகு, சில ஆண்டுகளுக்கு முன் மாதம்பட்டியில் இருந்த தங்களது கடைசி பங்களாவையும் விற்றுவிட்டு, சத்யன் சென்னைக்கு குடியேறியதாக கூறப்படுகிறது. தற்போது அவர் சென்னையின் பெரம்பூர் பகுதியில் சொந்த பிளாட் வீட்டில் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் 5 ஏக்கர் பங்களா, நூற்றுக்கணக்கான ஏக்கர் சொத்துகளுக்கு உரிமையாளராக இருந்த குடும்பத்தின் வாரிசு, இன்று தன்னுடைய திறமை மற்றும் உழைப்பை மட்டுமே நம்பி சினிமாவில் நிலைத்து நிற்கிறார்.

ஜமீன் வாழ்க்கையிலிருந்து சாதாரண நடிகர் வாழ்க்கை வரை சத்யன் கடந்து வந்த பாதை, வாழ்க்கையில் செல்வம் நிலையானது அல்ல என்றும், கடின உழைப்பும் பொறுமையும் தான் ஒருவரை முன்னேற்றும் என்றும் உணர்த்துகிறது. இன்று முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை வேடங்களில் தோன்றி ரசிகர்களை சிரிக்க வைக்கும் சத்யனின் வாழ்க்கை, பலருக்கு ஒரு பெரிய வாழ்க்கைப் பாடமாகவே பார்க்கப்படுகிறது.