இரவோடு இரவாக தற்கொலை செய்த நடிகை நந்தினி – “விவரிக்க முடியாத வேதனை” உடன் நடித்த நடிகை ஸ்வேதா கண்ணீர்.!
சென்னை: பிரபல சின்னத்திரை நடிகை நந்தினி நேற்று இரவு திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னட சின்னத்திரையில் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கிய நந்தினி, அங்கு பல பிரபல தொலைக்காட்சி தொடர்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். பின்னர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கௌரி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த தொடரில் துர்கா மற்றும் கனகா என இரட்டை வேடங்களில் நடித்த நந்தினி, குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இந்த நிலையில், நேற்று இரவு பெங்களூரில் உள்ள ஹோட்டல் அறையில் நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவருடன் கௌரி தொடரில் நடித்த நடிகை ஸ்வேதா சுப்ரமணியன், சமூக வலைதளத்தில் உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார். “நந்தினி… RIP சத்யாவின் துர்கா” என பதிவிட்டுள்ள அவர், நந்தினியுடன் கழித்த நினைவுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “ஷூட்டிங் ஸ்பாட்டில் சிரித்து மகிழ்ந்த நாட்கள், ஜாலி ரீல்ஸ், மேக்கப் அறையில் பகிர்ந்த ரகசியங்கள்—all now painful memories. நீ எப்போதும் என் துர்காவாக, நட்சத்திரமாக ஜொலிப்பாய். இந்த இழப்பு எங்கள் இதயங்களையும் பணியிடத்தையும் சிதைத்துவிட்டது. நீ எங்களுடன் இல்லை என்பதை மனது ஏற்க மறுக்கிறது” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தற்கொலை எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. யாருக்காவது மன வேதனை இருந்தால் தயவு செய்து உதவி கேளுங்கள். நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை” என அவர் விழிப்புணர்வு செய்தியையும் பகிர்ந்துள்ளார்.
நடிகை நந்தினியின் திடீர் மறைவு, சின்னத்திரை உலகை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
