சின்னத்திரை நடிகை நந்தினி பெங்களூரில் தற்கொலை – திரையுலகினர் அதிர்ச்சி.!

பெங்களூரில் வசித்து வந்த கன்னட சின்னத்திரை நடிகை நந்தினி, நேற்று இரவு தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது திடீர் மறைவு கன்னட மற்றும் தமிழ் தொலைக்காட்சி உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நந்தினி, ஜீவ ஹூவாகிடே, சங்கர்ஷா, மதுமகளு, நீனாதே நா உள்ளிட்ட பல பிரபலமான கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். மேலும், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி தொடரில் கனகா மற்றும் துர்கா என சவாலான இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த தொடர் அவருக்கு பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது.

கௌரி தொடரின் படப்பிடிப்பு ஆரம்பத்தில் பெங்களூரில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, பின்னர் நந்தினி பெங்களூருக்கு சென்றதாக கூறப்படுகிறது.

நந்தினி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரது குடும்பத்தினரிடமும், உடன் நடித்த நடிகர் நடிகைகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை நந்தினியின் திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.