புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல் – மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் பெறுவோருக்கு வரி இல்லை!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வருமான வரி சட்டம் வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாக, ஆண்டு ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறும் ஊழியர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இதுவரை நடைமுறையில் இருந்த 1961-ஆம் ஆண்டு வருமான வரி சட்டம் பல தொழில்நுட்ப சொற்கள் மற்றும் சிக்கலான சட்டப்பிரிவுகள் கொண்டதாக இருந்து, சாமானியர்களுக்கு புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை மாற்றும் வகையில், பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறும் புதிய வருமான வரி சட்டம்–2025 உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.

64 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்படும் இந்த புதிய சட்டம், வரி கணக்கீட்டை எளிமையாக்குவதுடன், பொதுமக்களுக்கு தெளிவான விளக்கங்களுடன் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மாற்றம், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.