ஹாலிவுட் இயக்குநரும் ‘நோ வேவ் சினிமா’ முன்னோடியுமான அமோஸ் போ காலமானார்.

பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநரும், சுயாதீன திரைப்பட இயக்கத்தின் முக்கிய முன்னோடியுமான அமோஸ் போ (வயது 76) காலமானார். இந்த தகவலை அவரது மனைவி கிளாடியா சம்மர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘பங்க் பிலிம்மேக்கிங்’ (Punk Filmmaking) என்ற தனித்துவமான அணுகுமுறையின் மூலம், திரைப்படங்களில் தொழில்நுட்பத்தை விட கருத்து மற்றும் சிந்தனையை முன்னிலைப்படுத்தியவர் அமோஸ் போ. விதிகளை கேள்விக்குள்ளாக்கும் அவரது திரைப்பட பாணி, பின்னாளில் உருவான ‘நோ வேவ் சினிமா’ (No Wave Cinema) இயக்கத்திற்கு அடித்தளமாக அமைந்தது.

ஹாலிவுட்டில் இவர் இயக்கிய முக்கிய திரைப்படங்களில்
தி பிளாங்க் ஜெனரேஷன் (1976), த ஃபாரீனர் (1978), சப்வே ரைடர்ஸ் (1981), அல்பாபெட் சிட்டி (1985), பிராக்ஸ் பார் சினேக்ஸ் (1998), வாக் இன் த பார்க் உள்ளிட்ட பல படங்கள் குறிப்பிடத்தக்கவை.

கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமோஸ் போ, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 25-ம் தேதி காலமானார்.

அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர், சுயாதீன திரைப்படக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் புதிய சிந்தனைகளையும் மாற்று பார்வையையும் கொண்டு வந்த அமோஸ் போவின் பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும் என திரையுலகினர் கூறுகின்றனர்.