குடும்பங்கள் கொண்டாடும் Daughter மமிதா பைஜு” – ஜன நாயகன் ஆடியோ லாஞ்சில் விஜயின் நெகிழ்ச்சியான பேச்சு

மலேசியாவில் நடைபெற்ற நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ரசிகர்களுக்கு உணர்ச்சி நிறைந்த பிரம்மாண்ட நிகழ்வாக அமைந்தது. நடிகர் நாசர், விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என மேடையிலேயே கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு தனது உறுதியான பதிலை விஜய் இந்த விழாவிலேயே வழங்கினார்.

“முதல் நாளிலிருந்து எனக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன்” என விஜய் கூறியபோது, மைதானம் முழுவதும் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, விஜய் மேடையில் ஆடிய One Last Dance ரசிகர்களை மேலும் எமோஷனலாக்கியது. பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக திகழ்ந்த தளபதிக்கு, மலேசிய மண்ணில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீரும், சந்தோஷமும், உற்சாகமும் கலந்து பிரம்மாண்டமான ஃபேர்வெல் அளித்தனர்.

விழாவில் விஜய் தனது ரசிகர்களுக்காக பாடியும், ஆடியும், உணர்ச்சிப்பூர்வமாக பேசித்தான் நிகழ்ச்சியை நிறைவு செய்தார். அந்த தருணங்கள், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவை மறக்க முடியாத நினைவாக மாற்றின.

இதனிடையே, நடிகை பூஜா ஹெக்டேவை பற்றி பேசும் போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தில் மோனிகா பெல்லூச்சி ஸ்டைலில் அவர் நடனமாடியதை குறிப்பிட்ட விஜய், “தமிழ் சினிமாவின் மோனிகா பெல்லூச்சி” என்ற பட்டத்தையும் தனது ஸ்டைலில் வழங்கினார். ஏற்கனவே பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய பூஜா ஹெக்டேயின் சமீபத்திய ஹிட் பாடலை குறிப்பிட்டு விஜய் பேசியது, ரசிகர்கள், பூஜா ஹெக்டே மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும், நடிகை மமிதா பைஜு குறித்து விஜய் பேசுகையில்,
“மமிதா இன்று இளைஞர்கள் கொண்டாடும் டியூட் மட்டும் இல்லை. இந்த படத்துக்குப் பிறகு குடும்பங்கள் கொண்டாடும் டாட்டராகவும் மாறுவார்” என்று கூறினார். ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு மகளாகவே மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், விஜயின் இந்த பேச்சு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது உரையை வைத்து, இந்த படம் குடும்ப ரசிகர்களையும் கவரும் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.