One Last Dance” – ஜன நாயகன் ஆடியோ லாஞ்சில் ரசிகர்களை கண்கலங்க வைத்த தளபதி விஜய்

நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த விழா, மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. விஜயின் பேச்சு, குட்டிக்கதை உள்ளிட்டவற்றை நேரடியாக கேட்பதற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் புக்கட் ஜலீல் மைதானத்தில் திரண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷம் அளிக்கும் வகையில், ஜன நாயகன் திரைப்படத்தில் விஜய் குரலில் உருவான ‘தளபதி கச்சேரி’ பாடலை விஜய் நேரடியாக பாடினார். அதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் தரப்பில் இருந்து அந்த பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ரசிகர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட விஜய், மேடையிலேயே நடனமாடினார். அவரது நடனம் மைதானம் முழுவதும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தளபதி கச்சேரி பாடல், படக்குழு தரப்பில் இருந்து வெளியான முதல் பாடலாகும். இந்த பாடலில் விஜய் உடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பலரும் நடனமாடியுள்ளனர். ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் மேடையில் ஆடிய நடனம், ரசிகர்களுக்கு மிகுந்த உணர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பல ரசிகர்கள், இதை “தளபதியின் One Last Dance” என்று குறிப்பிட்டு, “Miss You Thalapathy” என பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து விஜய் மேடையில் பேசுகையில், தனது ரசிகர்கள் குறித்து உருக்கமான கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
“முதல் நாளில் இருந்தே என்னுடன் பயணிக்கும் என் ரசிகர்கள், ஒரு நாள் இரண்டு நாள் எனக்காக நிற்கவில்லை. கடந்த 33 ஆண்டுகளாக எனக்காக பல இடங்களில் நின்றிருக்கிறார்கள். அதனால்தான் நான் இன்று இந்த இடத்தில் நிற்கிறேன். அவர்கள் 33 ஆண்டுகள் எனக்காக நின்றார்கள்; அடுத்த 30, 33 ஆண்டுகள் நான் அவர்களுக்காக நிற்கப் போகிறேன்,” என்று கூறினார்.

மேலும் அவர்,
“எனக்கு ஒன்னு என்றால் ரசிகர்கள் தியேட்டரில் நிற்கிறார்கள். இனி அவர்களுக்கு ஒன்னு என்றால், நான் அவர்கள் வீட்டில் நிற்பேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக, நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன்,” என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

விஜயின் இந்த பேச்சும், நடனமும், ரசிகர்களை ஆழமாகத் தொட்டது. ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா, விஜய் ரசிகர்களுக்கு நீண்ட காலம் மறக்க முடியாத நினைவாக மாறியுள்ளது.