“எதிரிகள் தான் உன் வெற்றியை தீர்மானிக்கிறார்கள்” – ஜன நாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் எஸ்.ஏ.சி உருக்கமான பேச்சு
எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர், தனது மகன் விஜய் குறித்து உருக்கமாக பேசினார்.
“என்னுடைய மகன் ஒரு நடிகனாக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இவ்வளவு பெரிய நடிகராக வளர்வார் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை. அதற்கு காரணம் நான் மட்டும் அல்ல, விஜயை வைத்து படம் இயக்கிய அனைத்து இயக்குநர்களும் தான்,” என்று கூறினார்.
மேலும், “இப்போது விஜய் ஜன நாயகனாக வந்திருக்கிறார். அவர் வெறும் ஜன நாயகன் மட்டும் இல்லை. மக்கள் நாயகன், இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் மக்களின் தலைவன். தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குநர்களை இந்த மேடையில் ஏற்றி கௌரவித்ததால்தான் நான் இப்படிச் சொல்கிறேன்,” என்று விளக்கினார்.
விஜயின் முதல் திரைப்படமான நாளைய தீர்ப்பு குறித்து நினைவுகூர்ந்த எஸ்.ஏ. சந்திரசேகர்,
“அந்த படத்தில் நடித்த விஜயின் முதல் காட்சி இன்றும் என் நினைவில் இருக்கிறது. முதல் படத்திலேயே அவர் மிக நேர்த்தியாக நடித்திருந்தார். படம் வெற்றிபெறவில்லை என்றாலும், அவருக்குள் இருந்த நடிப்பு திறமையை நான் வெளிக்கொண்டு வந்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு இன்றுவரை இருக்கிறது,” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர்,
“எப்போதும் நம் வெற்றியை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்று சொல்வார்கள். அதுபோல விஜய் பல கஷ்டங்கள், தோல்விகள், துரோகங்கள் அனைத்தையும் கடந்து தான் இன்றைய தளபதி விஜயாக இந்த இடத்தை அடைந்துள்ளார். கஷ்டங்களையும் வலிகளையும் தாங்கியவனால்தான் உண்மையான தலைவனாக முடியும். அப்படி ஒரு தலைவனாக என் மகன் வந்திருக்கிறார்,” என்று உருக்கமாக பேசினார்.
இந்த அரங்கில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியிருப்பதை குறிப்பிட்ட அவர்,
“இவர்கள் அனைவரும் என் மகனை பார்க்க வந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது என் மனம் பெருமையால் நிறைகிறது. என் மகனை அப்படியே கட்டி அணைக்க வேண்டும் என்று தோன்றுகிறது,” என்று பேசிக்கொண்டிருந்த தருணத்தில், சுமார் 800 மீட்டர் தூரத்தில் இருந்து ஓடி வந்த விஜய் மேடையேறி தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை கட்டியணைத்தார்.
இந்த தந்தை–மகன் தருணம், அரங்கில் இருந்த ரசிகர்களை ஒரு நொடி மெய் சிலிர்க்க வைத்தது. ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவின் மிகவும் உணர்ச்சிபூர்வமான, மறக்க முடியாத தருணமாக அது மாறியது.
