“75 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நாசரின் உருக்கமான வேண்டுகோள் – ‘விஜய், சினிமாவை விட்டு போகாதீர்கள்’”
மலேசியாவில் நடைபெற்ற நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ரசிகர்களின் பெரும் திரளும் உணர்ச்சிபூர்வமான தருணங்களும் நிறைந்த வரலாற்று நிகழ்வாக அமைந்தது. கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக நடத்திய இந்த விழாவில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அ. வினோத், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, நடிகர்கள் நாசர், சுனில், நரேன் உள்ளிட்ட படக்குழுவினர் மேடையில் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் நெல்சன், லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லி ஆகியோரும் பங்கேற்று, விஜய் குறித்த நினைவுகளையும் பாராட்டுகளையும் பகிர்ந்தனர்.
விழாவில் பேசிய நடிகர் நாசர், விஜய் மீது கொண்ட தனது ஆழமான பாசத்தையும் நன்றியையும் வெளிப்படுத்தி அரங்கையே அமைதியாக்கினார்.
“பொதுவெளியில் இதை சொல்ல வேண்டாம் என்று விஜய் எனக்கு கூறியிருந்தாலும், நான் இதை சொல்லாமல் இருக்க முடியாது. படுக்கையிலேயே இருந்த என் மகனை எழுந்து நடக்க வைத்தவர் விஜய் தான்,” என உருக்கமாக கூறினார். தனது மகன் இந்த விழாவுக்கு வர முடியாத நிலையில், “விஜய் அண்ணாவுக்கு என் பெஸ்ட் விஷஸ் சொல்லுங்கள்” என்று கூறி அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
விஜய்யுடன் நடித்த தமிழன், வசீகரா போன்ற படங்களை நினைவுகூர்ந்த நாசர், “எனக்கு மிகவும் பிடித்த படம் போக்கிரி. விஜய் எனக்கு ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு மகன் போன்றவன்,” என்று கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
விஜய் அரசியல் களத்தில் நுழைந்துள்ள நிலையில், ‘ஜன நாயகன்’ தான் அவரது கடைசி படம் என அறிவித்திருப்பது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்திய நாசர்,
“ஒரு சக நடிகனாக இதை கேட்பது எனக்கு ரொம்பவே வலிக்கிறது. நீங்கள் எடுத்த முடிவை மாற்றினால் விமர்சனங்கள் வரும். ஆனால், நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையே விமர்சனங்களுக்கான பாதை தான். இங்கே இருக்கும் 75 ஆயிரம் ரசிகர்கள் சார்பாக ஒரு கோரிக்கை—மீண்டும் சினிமாவில் தொடர்ந்து நடிங்க விஜய்,” என்று உருக்கமாக கேட்டுக்கொண்டார்.
இந்த உருக்கமான பேச்சை தொடர்ந்து, அரங்கம் முழுவதும் “விஜய் மீண்டும் நடிக்க வேண்டும்” என்ற கோஷம் ஒரே குரலாக ஒலித்தது. அந்த தருணம், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவின் மிக முக்கியமான மற்றும் மறக்க முடியாத நிமிடமாக மாறியது.
