திலீப்பிற்கு முத்தம்… வாண்டடாக வந்து மாட்டிய ரியாஸ் கான்… கொதித்தெழும் ரசிகர்கள்!
மலையாள திரையுலகையே உலுக்கிய நடிகை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகையை ஓடும் காரில் கடத்தி வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், நேரடியாக சம்பந்தப்பட்ட ஆறு பேருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது. ஆனால், இந்த குற்றத்திற்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப், போதிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தால் விடுவிக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில் இருந்து திலீப் விடுவிக்கப்பட்ட உடன், அவர் நடித்திருந்த ‘பா பா பா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அந்த படத்தில் நடிகர் மோகன் லால் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும், தீர்ப்பு வெளியானதும் மோகன் லால் அந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், மலையாள டப்பிங் கலைஞரும் நடிகையும் சமூக ஆர்வலருமான பாக்யலட்சுமி, கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பேசும்போது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “ஒரு பெண்ணுக்கு எதிரான கொடூர குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருடன் நிற்பது உணர்ச்சியற்ற, சிந்தனையற்ற செயல். இது தவறான முன்னுதாரணம்” என அவர் கூறினார். மேலும், “மோகன் லால் ஒரு கணம் கூட யோசிக்கவில்லையா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே, நடிகர் ரியாஸ் கான் திலீப்பிற்கு ஆதரவாக வெளிப்படையாக கருத்து தெரிவித்ததும் புதிய சர்ச்சையை உருவாக்கியது. திலீப்பிற்கு முத்தம் கொடுத்து ஆதரவு தெரிவித்த அவரது செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இந்த செயல் பெண்களுக்கு எதிரான குற்றங்களை மறைமுகமாக நியாயப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுவதாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தற்போது மலையாள திரையுலகில் மட்டுமல்லாது, சமூக அளவிலும் பெரும் விவாதமாக மாறியுள்ளது. சட்டரீதியான தீர்ப்பை மதிக்க வேண்டிய அவசியம் இருந்தாலும், திரையுலக பிரபலங்களின் சமூக பொறுப்பும் நெறிமுறைகளும் என்ன? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் தீவிரமாக எழுந்துள்ளது
