Jana Nayagan Audio Launch: கட்சி கொடிக்குத்தானே தடை… ‘TVK.. TVK..’ என அரங்கம் அதிர கத்திய ரசிகர்கள்!
மலேசியா கோலாலம்பூரில் உள்ள புக்கட் ஜலீல் நேஷனல் ஸ்டேடியத்தில் தளபதி விஜய் நடித்துள்ள “ஜன நாயகன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இது விஜயின் திரை வாழ்க்கைக்கு ஒரு வகையில் ஃபேர்வெல் பார்ட்டி போல அமைந்துள்ளதால், உலகம் முழுவதிலிருந்தும் ரசிகர்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவில் கட்சி சார்ந்த எந்த பொருட்களும் அனுமதிக்கப்படாது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்கூட்டியே அறிவித்திருந்தனர். அதன்படி, கட்சி கொடிகள், துண்டுகள், தொப்பிகள், டி-ஷர்ட்கள், பேட்ச்கள் உள்ளிட்டவை மைதானத்திற்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.
மேலும், மலேசியா அரசின் அறிவுறுத்தலின்படி, விஜய் மேடையில் பேசும்போது அரசியல் கருத்துகள் எதையும் தெரிவிக்கக் கூடாது, திரைப்படம் மற்றும் திரை வாழ்க்கை குறித்த விஷயங்களை மட்டுமே பேச வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மைதானத்தில் கூடிய ரசிகர்கள் ஆரம்பத்தில் வழக்கம்போல் “தளபதி… தளபதி…” என கோஷமிட்டனர். ஆனால், ஒரு கட்டத்தில் விஜய் மைதானத்திற்குள் நுழைந்ததும், ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் “TVK.. TVK..” என ஒரே குரலில் கோஷமிடத் தொடங்கினர். இதனால் அரங்கமே அதிர்ந்தது.
“கட்சி கொடி, துண்டு, பேட்ச் போன்றவைகளுக்குத்தானே தடை. நாங்கள் ‘TVK.. TVK..’ என கத்தினால் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்புவது போல ரசிகர்கள் முழக்கமிட்டனர். இந்த காட்சிகள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
மலேசியா அரசு விதித்த அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நடைபெறும் இந்த விழாவில், ரசிகர்களின் உணர்ச்சிப் பெருக்கம் அரசியல்–சினிமா எல்லைகளைத் தாண்டி வெளிப்பட்டுள்ளது. இதன் மூலம், விஜயின் ரசிகர் வலிமையும், அவரின் அரசியல் தாக்கமும் ஒரே மேடையில் வெளிப்பட்டதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
