மலேசியாவில் விஜய்!… அணிந்துள்ள ஜாக்கெட்டின் விலை ரூ.1.24 லட்சமா? – வைரலாகும் ஸ்டைலிஷ் லுக்.!

நடிகரும் தவெக (TVK) தலைவருமான விஜய், தனது புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் மலேசியாவிற்கு புறப்பட்டு சென்றார். இந்த இசை வெளியீட்டு விழா, மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் தேசிய அரங்கில் நாளை மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சி வெறும் ஆடியோ லாஞ்ச் மட்டுமல்லாமல், விஜய் நடித்த படங்களில் இடம்பெற்ற பல ஹிட் பாடல்களை முன்னணி பாடகர்கள் நேரலையில் பாடும் இசை நிகழ்ச்சியாகவும் நடைபெறவிருக்கிறது. இசை நிகழ்ச்சி முடிந்த பின்னரே அதிகாரப்பூர்வ ஆடியோ லாஞ்ச் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இயக்குநர் அட்லி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் ஏற்கனவே மலேசியாவிற்கு சென்றுள்ளனர். மேலும், லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்ற இயக்குநர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல பகுதிகளில் இருந்து விஜய் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்காக மலேசியாவிற்கு குவிந்துள்ளனர். குறிப்பாக, இது விஜயின் கடைசி ஆடியோ லாஞ்சாக இருக்கலாம் என்ற தகவல் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா சென்ற விஜய்க்கு விமான நிலையத்தில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

அதில் குறிப்பாக விஜய் அணிந்திருந்த ஸ்டைலான நீல நிற ஜாக்கெட் தான் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது. அந்த ஜாக்கெட் பிரபல சர்வதேச பிராண்ட் ஆன GIORGIO ARMANI நிறுவனத்தின் Blue Denim Jacket என தெரிய வந்துள்ளது. இதன் விலை இந்திய ரூபாயில் சுமார் ரூ.1,24,490 ஆகும்.

இந்த தகவலை நெட்டிசன்கள் ஆன்லைன் மூலம் கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். எப்போதும் போல, விஜய் தனது ஸ்டைலாலும், எளிமையான அணுகுமுறையாலும் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை கவர்ந்துள்ளார்.