பணமின்றி தவிக்கிறாரா பாரதிராஜா? தனுஷ் செய்த உதவி குறித்து பரவும் தகவல்.!
தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகள் மூலம் ஒரு புதிய அலைக்கு அடித்தளம் அமைத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. “என் பாசத்திற்குரிய தமிழ் மக்களே” என்ற அவரது அடையாள வரியுடன், ஒவ்வொரு படத்திலும் கிராமிய வாழ்க்கையின் எதார்த்தத்தையும் உணர்வையும் அழுத்தமாகப் பதிவு செய்தவர் அவர்.
கிழக்கே போகும் ரயில், 16 வயதினிலே, முதல் மரியாதை, சிகப்பு ரோஜாக்கள், கருத்தம்மா போன்ற எண்ணற்ற வெற்றிப்படங்கள் தமிழ் சினிமாவின் மைல்கற்களாக இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. 80களில் பல முன்னணி நடிகைகளை அறிமுகப்படுத்திய பெருமையும் பாரதிராஜாவுக்கே உரியது. குறிப்பாக ராதிகா, ராதா, ரேகா போன்ற நடிகைகள் அவரது படங்களின் மூலம் உச்சத்தை அடைந்தனர். மேலும் அவர் அறிமுகப்படுத்தும் நடிகைகளின் பெயர்களை ‘ர’ வரிசையில் மாற்றுவது அவரது வழக்கமாக இருந்ததும் சினிமா வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட விஷயமாகும்.
சமீப காலமாக பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக அவருடைய ஒரே மகனான நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானதற்குப் பிறகு, பாரதிராஜா கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பே அவர் உடல்நலக் குறைவால் தள்ளாடி நடக்கத் தொடங்கியதாகவும், மகன் இறப்புக்குப் பின் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாகவும் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.
பாரதிராஜாவுக்கு ஒரு மகளும் இருப்பதாகவும், அவர் மலேசியாவில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. வீட்டில் மனைவி இருந்தாலும், மனதளவில் அவர் தனிமையில் இருப்பதாக அந்தணன் குறிப்பிட்டுள்ளார். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களுடன் ஆறுதலாக பேசினாலே கையில் இருக்கும் பணத்தை கொடுத்து விடுவார்கள் என்பதுபோல், பாரதிராஜாவும் அப்படிப்பட்டவர் என்பதால், அவரிடம் யாரும் காசு கொடுக்க விரும்புவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, பாரதிராஜா தனக்கு நெருக்கமானவர்களிடம் உதவி கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் நேரடியாக காசு கேட்பதில்லை என்றும், தொலைபேசியில் குறுஞ்செய்தி (SMS) மூலமாக மட்டுமே தனது நிலையை தெரிவிப்பதாகவும் அந்தணன் கூறியுள்ளார். அந்த வகையில் நடிகர் தனுஷுக்கும் ஒரு செய்தி சென்றதாகவும், அதை அறிந்த தனுஷ் பாரதிராஜாவுக்கு உதவி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்கள் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இருப்பினும், இதுகுறித்து பாரதிராஜா தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
