மீனாவுக்கே டஃப் கொடுக்கும் நைனிகா! – அதுக்குள்ள இப்படி வளர்ந்துட்டாங்களே.!

தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய மீனா, பல படங்களில் குழந்தை நடிகையாக நடித்ததுடன், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக, “ரஜினி அங்கிள்” என்றால் ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது மீனாவே.

குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்துடன் நடித்த மீனா, காலப்போக்கில் அவருக்கு மிகச் சிறந்த ஜோடி என்ற அளவுக்கு உயர்ந்தார். முத்து, வீரா போன்ற படங்களில் ரஜினி – மீனா இணை செய்த லூட்டி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி, அந்த காலகட்ட ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தது.

ஹீரோயினாக என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமான மீனாவுக்கு அப்போது வயது வெறும் 17. அந்தப் படத்தில் அவருடன் நடித்த ராஜ்கிரண் சுமார் 40 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், மீனாவின் நடிப்பு அந்தப் படத்தில் பெரிதும் பேசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மீனா, அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியுடன் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக மாறினார்.

இதன் பின்னர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் சூப்பர் ஹிட் நாயகியாக வலம் வந்தார் மீனா. ரஜினி, கமல், அஜித், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார், முரளி, பார்த்திபன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மீனா என்றாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரது கண்கள்தான். அதனால்தான் “கண்ணழகி மீனா” என்ற பெயர் அவருக்கு நிலைத்தது.

ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்த மீனா, திருமணத்திற்குப் பிறகு கதாபாத்திர வேடங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதே நேரத்தில், அவரது திரைப்பயணத்தை நினைவூட்டும் விதமாக, அவரது மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக தெறி படத்தில் அறிமுகமானார். விஜய் மகளாக நடித்த நைனிகாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு, அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்காமல் காணாமல் போனார்.

இந்நிலையில், சமீபத்தில் மீனாவும் அவரது மகள் நைனிகாவும் இணைந்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்தப் புகைப்படங்களில், நைனிகா சேலை அணிந்து போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மீனாவும் நைனிகாவும் அருகருகே நிற்கும் போது, “மீனாவையே மிஞ்சும் அழகு” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனால், “மீனாவுக்கே டஃப் கொடுக்கும் நைனிகா” என்ற பேச்சு இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது. எதிர்காலத்தில் நைனிகா மீண்டும் திரையுலகில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.